அழகாய் துளிர்விட்டு
ஆழமாய் வேரோடி
அன்னை தந்தை அரவணைப்பில்
பூத்து செழித்து
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பாய்!
கிளைகள் பரவி
நற்காய்கள் தரும் தருணம்
வேரோடு பிடுங்கி
நாடு கடத்தப்படுவாய்
திருமண வழக்கத்தில் !!
ஏற்படும் வேதனைகளை
எதிர்கொள்ளும் துணிவில்
மறைத்து புதிய வாழ்வில்
சாதனைகனிகள் படைப்பதில்
உனக்கு நிகர் நீயே!
ஒரு கை கரண்டி ஏந்த
மறு கை குழந்தை ஏந்த
இல்லாத மனக்கையோ
இலட்சியக்கனவினை ஏந்த
அனைத்தையும் அனுதினமும்
அயராமல் அனுசரிப்பதில்
உனக்கு நிகர் நீயே!
உனக்கென்று வரம்பு ஏதுமில்லை
உனக்கென்று சட்டம் ஏதுமில்லை
எதுவும் உனக்கு கட்டாயமில்லை
ஆனாலும் அன்பிற்கு அடங்குவதில்
உனக்கு நிகர் நீயே!
அனைத்தையும் கொடுப்பவளே நீயாக
உன் சுதந்திரம் வேண்டி இனியும்
நீ செல்வதெங்கே?
கருவறை சுமப்பவளே நீயாக
உன் புனிதசமத்துவ இடம் நாடி
நீ செல்வதெங்கே?
அன்பும் அறிவுமே உன் ஆளுமையாக
பண்பும் பொறுமையுமே உன் தாய்மையாக
துணிவும் தியாகமுமே உன் பெண்மையாக
இயற்கையின் படைப்பில் என்றும்
உனக்கு நிகர் நீயே!!
– மீனாட்சி வெங்கடேஷ்