சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 245 சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. இதில் நடப்புப் பணியிடங்கள் 153, பின்னடைவுப் பணியிடங்கள் 92 ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுப் பட்டியல் வெளியான பிறகு, இந்தத் தேர்வை எழுதிய தேர்வர்கள் சிலர் பணியிடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படவில்லையெனக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.
“இந்தப் பட்டியலில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், பொதுப் பட்டியலில் இடம்பெறுவதற்குப் பதிலாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், வேறு சிலர் இட ஒதுக்கீடு பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது,” என்று கூறி, பாதிக்கப்பட்ட ஒன்பது தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதில்(பிப்ரவரி 29) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பொதுப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர். இது இட ஒதுக்கீட்டுத் தத்துவத்திற்கே மாறானது. ஆகவே அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும் மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்தும் திருத்தி அமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்களில் விசாரித்தபோது, இது விதியைத் தவறாகப் புரிந்துகொண்டதால் நேர்ந்த தவறு எனத் தெரிவித்தனர்.
அதாவது, மொத்தம் 245 நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 92 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்தவை. 153 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட வேண்டியவை. இதில் ஏற்கனவே நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களைப் பொறுத்தவரை, அவைதான் முதலில் நிரப்பப்பட வேண்டும். மேலும், எந்தெந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவில் அந்தப் பணியிடங்கள் இருக்கின்றனவோ, அதைச் சரியாக பார்த்து அந்தந்த ஒதுக்கீட்டிற்கு ஏற்றபடி நிரப்ப வேண்டும்.
அதைச் செய்யும்போது, அதிக மதிப்பெண்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோரை வைத்து அந்த இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால், விதிமுறைப்படி பொதுப் பிரிவினருக்கான இடங்களை நிரப்பிவிட்டு, மீதமுள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினரை வைத்துக்கொண்டு இந்தப் பட்டியலை நிரப்பியிருக்க வேண்டும். பின்னடைவுப் பட்டியலை முதலில் நிரப்ப வேண்டும் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாததால் நேர்ந்த தவறு இது. விரைவிலேயே நீதிமன்றம் கூறியபடி புதிய பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.