சென்னை போரூரில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் புதிய இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை போரூர், ஆற்காடு சாலையில் பிரபல தனியார் நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக 41 வயதாகும் அலெக்சாண்டர் என்பவர் வேலை செய்து வருகிறார். அண்மையில் அலெக்சாண்டர் வேலை செய்யும் பைக் விற்பனை நிலையத்திற்கு ஆசாமி ஒருவர், தனது மகளின் பிறந்த நாளுக்கு பரிசாக புதிய மோட்டார் சைக்கிள் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார். அதனை தவணைமுறையில் எடுத்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
அதன்படி அங்கிருந்த ஒரு புதிய இருசக்கர வாகனத்தை பார்த்துவிட்டு அதனை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். கடை ஊழியர்கள் அவரிடம் இருந்து ஆவணங்களை வாங்கி அனைத்து பணிகளும் முடிந்து முன்பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்கள். அப்போது பணத்தை மறந்து விட்டது போல் நாடகம் ஆடிய அவர், வீடு பக்கத்தில் தான் உள்ளது, கடை ஊழியரை அனுப்பினால் வீட்டில் இருந்து பணம் எடுத்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலாளர் அலெக்சாண்டரும் அதனை நம்பி அவர் பதிவு செய்த புதிய பைக்கையும் அவரிடம் கொடுத்ததுடன், கடை ஊழியர் ஒருவரையும் உடன் அனுப்பி வைத்துள்ளார். புத்தம் புதிய மோட்டார் சைக்கிளில் கடை ஊழியரை ஏற்றிக்கொண்டு வளசரவாக்கம் சென்ற அந்த நபர், ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, வீடு வந்துவிட்டதாக கூறி ஊழியரை இறங்கும்படி தெரிவித்துள்ளார்.
பின்னால் அமர்ந்து இருந்த ஊழியர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதும், அந்த நபர் பணத்தை கொடுக்காமல் புதிய மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்று தலைமறைவாகியுள்ளார். பின்னர்தான் அந்த நபர் நூதன முறையில் புதிய மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது கடை ஊழியர்களுக்கு தெரியவந்தது. அவர் கொடுத்த ஆவணங்களை சோதனை செய்தபோது அவை போலி என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.
இது குறித்த பைக் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகன விற்பனை நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார் (43) என்பவரை கைது செய்தார்கள்.
அவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நகை கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி 5 பவுன் நகையை திருடிச்சென்றதும், மேலும் பல மோசடி வழக்குகளில் சிவகுமார் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான சிவகுமாரிடம் இருந்து புதிய மோட்டார் சைக்கிள், 2 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.