மெட்ராஸ்டர்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு துடிப்பான படைப்பாற்றலின் மையமாகும். சமூக இணைப்புகளை வளர்ப்பது மற்றும் படைப்பாற்றலை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடும் வடிவமைப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உத்வேகம் கொண்ட சமூகம். வடிவமைப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள படைப்பை வழங்கவும் இது வழி வகுக்கிறது.பல்வேறு இடங்களில், பல்வேறு வேலைகளில் பணிபுரியும் நபர்கள் சமூக மாற்றத்திற்கான தங்களது பொறுப்பை வெளிப்படுத்தும் நோக்கில் ஒன்றிணைந்து எந்தவிதமான லாப நோக்கமும் இல்லாமல் செயல்படுவது இந்த குழுவின் சிறப்பம்சமாகும்.
மெட்ராஸ்டர்ஸ் என்னும் ஒரு சமூக அமைப்பின் கீழ் பல்வேறு தலைப்புகளில் ஆண்டின் பல்வேறு பகுதிகளில் அறிவார்ந்த சமூக முன்னேற்றத்திற்காக இந்த குழுவால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று தான் ஆர்ட் ஸ்பாட்.
உன்னத நோக்கத்திற்காக மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து பெறப்பட்ட உத்வேகத்தில் ஆர்ட் ஸ்பாட் கலைப்படைப்பை உன்னத நோக்கத்திற்காக பயன்படுத்த எண்ணியது. உபயோகப்படுத்தப்பட்ட துணிகளை தானமாக பெற்று அவற்றை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், சமூக ஆர்வலர்கள் மூலமும் தேவைப்படுபவர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டு கடந்த ஆண்டு அதில் வெற்றியும் கண்டதின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் கருப்பொருளாக கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்தது.
மக்களிடம் இந்த முயற்சியை கொண்டு சேர்க்கும் வகையில் சென்னை அணியின் அடையாளமாக மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத தாக்கத்தையும் உலக அரங்கில் இந்திய அணியை திரும்பி பார்க்க வைத்த பெருமை பெற்ற இணையற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்களுடைய உருவப்படத்தை கலை வடிவமாக முடிவெடுக்கப்பட்டு அந்தப் பொறுப்பு முதன்மை கலைஞர் மற்றும் மேலாளரான திரு.சபரிநாதன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திரு சபரிநாதன் தலைமையில் தகுதியும் திறமையும் பெற்ற கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோனி அவர்களின் உருவப்படம் சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஐந்து நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
தோனி அவர்களின் 250 ஆவது ஐபிஎல் போட்டியை குறிக்கும் வகையில் 250 கிலோ உபயோகப்படுத்தப்பட்ட துணிகளை தானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தானமாக பெறப்படும் துணிகளில் இருந்து ஐந்து சதவீத துணிகளை உபயோகப்படுத்தி கலை படைப்பை உருவாக்க திட்டம் வகுத்து உருவாக்கப்பட்டது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 250 கிலோவை விட அதிகமாக துணிகள் பெறப்பட்டது இவர்கள் முயற்சியின் வெற்றியாக கருதப்படுகிறது.
வணிக வளாகத்திற்கு வந்த பொதுமக்கள் இந்த உருவ படத்துடன் தங்களை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
தொலைநோக்கு பார்வை கொண்ட மெட்ராஸ்டர்ஸ் சமூகத்தின் நிறுவனர் ஜாக் அன்டோ இந்த ஆண்டிற்கான ஆர்ட் ஸ்பாட் பற்றி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியவர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு முக்கிய அங்கத்தை பிடித்து இருக்கும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு மரியாதை செய்வதில் மெய்சிலிர்க்கிரோம் என்றும், விளையாட்டு மற்றும் கலைகளின் எல்லைகளை உடைக்கும் வகையில் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்த எங்கள் கலைஞர்கள் குழு முயற்சி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு உறுதியான மாற்றத்தை தேவைப்படுபவர்களின் வாழ்வில் ஏற்படுத்த முற்படுவோம்” என்றும் கூறினார்.
கிரிக்கெட் விளையாட்டை சூதாட்டத்திற்கும் பல பெருநிறுவனங்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இது போன்ற சமூகப் பொறுப்பு கொண்ட செயல்களுக்கு அதை பயன்படுத்தும் இந்த குழுவிற்கு நீதியின் நுண்ணறிவு குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.