மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2.5.24ம் தேதியன்று பட்டாசு உற்பத்தி செய்யும் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கண்காணிக்கும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரி.மீனா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு.மணிமேகலை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அர்ச்சனா, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.சரவணபாபு, வட்டாட்சியர்கள், குத்தாலம், சீர்காழி மற்றும் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் கடையின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி செய்யும் வெடி மருந்து குடோன்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கின்றனவா என மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திடவும், பட்டாசு தயாரிக்கும் உரிமையாளர்கள் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பாக தொழில் புரிவது குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் வழங்கப்படவும், பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள் வழங்கி அதனை பயன்படுத்தவும்,பட்டாசு உற்பத்தி செய்யும் பணியாளர்கள் அனுபவம் உடையவர்களை நியமிக்கவும், பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்தின் அறைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே வேதிபொருட்களின் கலவை கலந்திடவும், பட்டாசு உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மருந்து கலக்கும் பணியானது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படவும், மருந்து கலக்கும் அறையில் எச்சரிக்கை அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஹைக்ரோ மீட்டர் பொருத்தப்பட்டு ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் அளவினை அவ்வப்போது கண்காணித்து வெடிமருந்து கலவைக்கு வெப்பம் பரவாதவாறு கண்காணிக்கவும், பட்டாசு உற்பத்தி செய்யும் கடையின் உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.