புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சேர்மனாகவும், தி.மு.க கறம்பக்குடி நகரச் செயலாளராகவும் இருப்பவர் முருகேசன். இவர்மீது, ‘அரசுப் பணத்தில் சொந்த நிலத்துக்குச் சாலை போடுகிறார்’ என்ற அதிரி புதிரி குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரை குணா, “கறம்பக்குடி பேரூராட்சி எல்லைக்குள் அக்னியாற்றின் கரையிலுள்ள நீர்நிலைப் புறம்போக்கு இடம், குளக்கரை, பட்டா நிலங்கள் எனச் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. நபார்டு திட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தார்ச்சாலை போடப்படுகிறது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்தச் சாலை அமைக்கப்படும் பகுதியில், கறம்பக்குடி சேர்மனான முருகேசன் என்பவருக்கு மட்டுமே தென்னந்தோப்பு உள்ளிட்ட விவசாய நிலங்கள் இருக்கின்றன. அவரைத் தவிர ஒரு அ.தி.மு.க பிரமுகரும், இரண்டு விவசாயிகளும் குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கிறார்கள். வேறு எந்த விவசாயியின் நிலமோ, வீடோ அங்கு இல்லை. இதே கறம்பக்குடி பேரூராட்சியின் 2-வது வார்டில், சில மீட்டர் தூரத்துக்குச் சாலை கேட்டு அந்தப் பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் சுயலாபமடைய இந்தச் சாலை அமைக்கப்படுகிறது” என்றார் கொதிப்புடன்.
சமூக ஆர்வலர் ராஜரத்தினம் பேசும்போது, “அக்னியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது. இந்தச் சாலை, மணல் திருட்டை இன்னும் அதிகப்படுத்தப் போடப்படுகிறதா அல்லது நீர்நிலைப் புறம்போக்கு இடத்தில் பிளாட் போடத் திட்டமிடுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.
இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு கறம்பக்குடி பேரூராட்சி சேர்மன் முருகேசனிடம் விளக்கம் கேட்டோம். “சாலை வசதி இல்லாததால், சுமார் 30 விவசாயக் குடும்பத்தினர் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தார்கள், அதனால், முறையாகத் தீர்மானம் நிறைவேற்றித்தான் இந்தச் சாலையை போடுகிறோம். மற்றபடி, அந்தப் பகுதியில் மணல் திருட்டுப் பிரச்னையெல்லாம் இல்லை’ என்றார். பொதுப்பணித்துறை ஆலங்குடி உட்கோட்ட உதவிப் பொறியாளர் உதயகுமாரோ, “வேளாண்மைப் பயன்பாட்டுக்காக, நபார்டு திட்டத்தில் இந்தச் சாலை போடப்படுகிறது. மற்றபடி தனிப்பட்ட முறையில் யாருக்காகவும் சாலை அமைக்கவில்லை” என்றார்.
கறம்பக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், “பேரூராட்சித் தலைவரின் தென்னந்தோப்புக்கு சாலை செல்கிறது என்று சொல்கிறீர்கள். அதற்கு முன்பாக அவரின் பங்காளிகளுக்கும் அங்கு நிலம் இருக்கிறது. அந்தப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் 25 விவசாயிகளுக்கு அந்தச் சாலை பயன்படும்” என்றார்.