வேலையில் மூழ்கி போன காதருக்கு கமிஷனரின் வண்டி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டு பெண் கொலை வழக்கை பற்றிய சிந்தித்துக் கொண்டிருந்த காதர் மிகவும் வறட்சியாக இருந்த காரணத்தால் தேநீர் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் என்று என்னி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்தது அவருக்கான அதிர்ச்சி. “மீண்டும் அலுவலகத்திற்கு வருகை தர மாட்டேன்” என்று கூறிய கமிஷனரின் வாகனம் எதன் காரணமாக அலுவலகத்தின் முன்பு நின்று கொண்டிருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்தார். ஒருவேளை அந்த முக்கிய நபர் உள்ளே இருப்பாரோ? என்ற எதிர்பார்ப்பு வறட்சியை விட மேலோங்கி இருந்த காரணத்தால் தனது தேநீர் இடைவேளையை மறந்துவிட்டு கிடுகிடு என கமிஷனரின் அரைநோக்கி படிக்கட்டில் பாய்ந்தார் காதர். அரை நொடிக்குள் அறை முன்னே வந்து நின்ற அவரிடம் கமிஷனரின் உதவியாளர் “சார், சார் நில்லுங்க. உள்ளே, ஐயா முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க. யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. என்ன விஷயம் என்று சொல்லுங்கள். மீட்டிங் முடிந்த பிறகு நான் அய்யாவிடம் சொல்லி அவர் கூப்பிடச் சொன்னால் உங்களை அழைக்கிறேன்.” என்று கூறி காதரை திருப்பி விட்டார் உதவியாளர்.
உள்ளே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது. என்று புரியாமல் மிகுந்த குழப்பத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்த காதர் கமிஷனர் உதவியாளரிடம் “காலையில ஒரு மர்டர் கேஸ் விஷயமா சார் சொல்லி இருந்தாங்க அத பத்தி அப்டேட் பண்ணனும். சார் கூப்டா என்னிடம் சொல்லுங்கள்.” என்று கூறிவிட்டு மீண்டும் தேநீர் இடைவெளியை தொடர வெளியே வந்தார் காதர்.
வெயிலின் தாக்கமும் காற்றின் வரட்சியும் அதிகமாக இருந்ததால் இளநீர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அலுவலகம் விட்டு வெளியே நடக்க தொடங்கினார். 10 அல்லது 15 அடி எடுத்து வைத்ததும் “சார்” என்று கூறிக் கொண்டே கமிஷனரின் உதவியாளர் காதரை நோக்கி வேகமாக வந்து, “உங்களை அய்யா உடனடியா கூட்டிட்டு வர சொன்னாங்க. சாரி சார். என்னோட தப்பு தான். ஒரு நொடி உங்களை அங்கே காத்திருக்க சொல்லி இருந்தால் வெளியே வந்திருக்க மாட்டீர்கள்” என்றார்.
“பரவால்ல சார்.. இப்ப என்ன ஆச்சு வாங்க போகலாம்” என்று இருவரும் வேகமாக கமிஷனர் அறையின் நுழைவு கதவின் முன்னே நின்றனர். மெதுவாக கதவைத் திறந்து உள்ளே தலையை நீட்டினார் உதவியாளர். அதை கவனித்த கமிஷனர் உள்ளே வரும்படி கையசைத்தார். உள்ளே சென்ற உதவியாளரிடம் “எங்கப்பா நீ மட்டும் வந்திருக்க காதரை கூட்டிட்டு வர சொன்னேன்ல?” என்று கேட்டார். “சார் வெளியில தான் சார் நிக்கிறாங்க” என்று கூறிய உதவியாளரிடம் கமிஷனர் “மறுபடியும் எதுக்கு வெளிய வச்சிருக்கீங்க உள்ள வர சொல்லுங்க போங்க” என்று தடித்த குரலில் கூறினார். வெளியே வந்த உதவியாளர் காதருக்கு கதவை திறந்து விட்டு உள்ளே செல்லும்படி சைகை செய்தார். உள்ளே நுழைந்த காதர் கமிஷனரை பார்த்தவுடன் வழக்கம் போல் காவலர் வணக்கம் வைத்தார்.
“வாங்க காதர் ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்தீங்க நம்ம ஆளு எப்ப வருவார்? என்று இதோ வந்து விட்டாரே!“ என்று எதிரே அமர்ந்து இருந்தவரை கை நீட்டினார். காதரின் முகத்தில் ஒளியும், புன்னகையும் ஒரு சேர இணைந்து ஜொலித்தது. ”சார் ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து” என்று அவருக்கும் காவலர் வணக்கம் வைத்தார். எதிரே அமர்ந்திருந்தவர் வேறு யாரும் இல்லை கதையின் நாயகன் மிஸ்டர் டிடெக்டிவ். அடர்ந்த பெரிய தாடியும், பல வண்ணங்களில் கைகளில் தட்டையாக சுற்றப்பட்டு இருந்த கயிறும், பல வண்ணங்கள் கொண்ட சட்டை மற்றும் வேஷ்டி, கட்டைவிரல் வார் செருப்பு என்று காவல்துறைக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத ஒரு மனிதர் போல் அமர்ந்திருந்தார் மிஸ்டர் டிடெக்டிவ். அவரின் அனைத்து தோற்ற தகவல்களையும் உள்வாங்கி ஜீரணிக்க காதருக்கு இரண்டு மூன்று நொடிப் பொழுது ஆனது. மீண்டும் தன்னை ஒரு சேர பற்றிய காதர், கமிஷனரை பார்த்து “சார்” என்று பேச தொடங்கும் முன்னர் கமிஷனர், “காதர் இனிமே எல்லாமே சார் கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க. இந்த ஒரு கேச சீக்கிரமா முடிச்சுட்டு அதுக்கு அப்புறம் உங்களோட பைல் எல்லாத்தையும் சார் கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.” என்று கை நீட்டினார்.
கமிஷனருடன் கைகுலுக்கிய காதரிடம் முதல் வார்த்தை பேசிய மிஸ்டர் டிடெக்டிவ் “இப்போ என்ன கேஸ் பாக்குறிங்க? அத நான் பாக்கணும் போலாமா?” என்றார். பதில் அளித்த கமிஷனர் “உங்க இஷ்டம் நீங்க எந்த கேசையும் சேர்த்து எடுத்துக்கலாம்” என்று கூறிவிட்டு எழுந்து நின்று மிஸ்டர் டிடெக்டிவ் உடன் கை குலுக்கினார். “உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறேன் என்று கமிஷனரிடம் கூறிவிட்டு வெளியே நடக்க தொடங்கினார் நாயகன். பின் தொடர்ந்து நடந்தார் காதர். வெளிய அமர்ந்திருந்த கமிஷனரின் உதவியாளரிடம் “நன்றி” என்று கூறிவிட்டு கீழே இறங்க தொடங்கிய நாயகன் சைகை காட்டி தனக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த காதரை முன்னே அழைத்தார். ஏற்கனவே இணைந்து பணியாற்றிய அனுபவம் இருந்ததால் காதருக்கு இவருடைய போக்கு நன்றாகவே தெரியும்.
செய்கையை புரிந்து கொண்டு முன்னே நடந்த காதரிடம் “போய் வண்டி எடுக்க இப்ப நடக்கிற கேஸ் ஸ்பாட்டுக்கு போக வேண்டும்” என்றார். கமிஷனருடைய வாகனம் தவிர வேறு எந்த அரசு வாகனமும் கண்ணில் தென்படவில்லை என்ற குழப்பத்தில் சுற்று சுற்றி பார்த்தார் காதர். மிஸ்டர் டிடெக்டிவ் சிரித்துக் கொண்டே “சுத்தி சுத்தி பார்க்கிறீர்கள் காதர் இதற்கு முன்னால் இந்த இடத்தை பார்த்ததில்லையா?” என்றார். “இல்ல சார் வண்டி எதுவும் இல்லை அதான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றார் காதர். “காலையில் நீங்கள் எதில் அலுவலகம் வந்தீர்கள்?” என்று கேட்ட நாயகனிடம் தனது இரு சக்கர வாகனத்தை நோக்கி கையை நீட்டி காதர் “இதோ இதுல தான் சார் என்னோட வண்டி” என்றார். “அப்புறம் என்ன அதான் இருக்குதே போகலாம் எடுங்க” என்றார் நாயகன். இருவரும் வாகனத்தில் ஏறி கொலை நடந்த நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்தனர். வாகனத்தில் இருந்து இறங்கிய நாயகன் காதரிடம் “வழக்கம்போல் எனக்கும் சல்யூட் அடித்து என்னை காட்டி கொடுத்து விட வேண்டாம்” என்று கண்டிப்பாக கூறினார். மேலும் தன்னை “சார்” என்று அழைக்க வேண்டாம் என்றும் “கருப்பையா” என்று அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உத்தரவை ஏற்றுக் கொண்டதாக காதர் தலையசைத்தவுடன் இருவரும் நேராக விடுதிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இரண்டு காவலர்கள் சம்பவம் நடந்த அறைக்கு முன்பாக அமர்ந்திருந்தனர் நாயகன் காதரிடம் “இவங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றாங்க? கொலை செய்தவன் பின்னல் இருந்து வந்திருக்கிறான்” என்று கூறியவுடன் ஆச்சரியத்தில் உறைந்தார் காதர்.
(தொடரும்…)