தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உலகின் முதல் பாரம்பரிய பள்ளிக்கான அலுவலகம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் முதற்கண் நோக்கமாக தமிழர்களின் பாரம்பரியமான ஆயக்கலைகள் 64. இது அழிந்து போன ஒரு அடையாளமாகி போன நிலையில் அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
ஆயக்கலைகள் 64 என்பது விவசாயம், மண்ணியல் சாஸ்திரம், வானியல் சாஸ்திரம், விளையாட்டு, மருத்துவம், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட நமது சந்ததியினை பாதுகாக்க கூடிய அனைத்து கலைகளையும் மீட்டெடுத்து அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த பள்ளியின் நோக்கம் என்று அதன் நிறுவனர் தேவேந்திரன் கூறினார்.
அழிந்து போன அனைத்து வகையான உணவு தானியங்களும் மீட்டெடுக்கும் பணியும், ஆயக்கலைகளான 64 ஐயும் நம் முன்னோர்களான சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய அரசர்கள் தலைமுறை, தலைமுறையாக பின்பற்றி வளர்த்து வந்தனர். அதனாலேயே அவர்கள் வெல்ல முடியாத ஒரு சக்தியாக இருந்தனர்.
இந்த கலைகளை கற்று பயிற்சி பெறும் பொழுது, உடலும் உள்ளமும் தெளிவடைந்ததுடன், நோய் நொடியில் இருந்தும் தங்களை பாதுகாத்து வந்தனர். இதனை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கிராமத்து இளைஞர்களுக்கு செய்து காட்டிய பொழுது அதனை கண்ட டெல்லியில் உதவி கமிஷனர் ஆக பணியாற்றும் ஆர்.சத்திய சுந்தரம் ஐ.பி.எஸ்., இந்தப் பகுதி இளைஞர்களுக்கு அதனை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் பேராவூரணி பட்டுக்கோட்டை ஒட்டிய கிராமங்கள் தோறும் அமைப்பை உருவாக்கி வாள் வீச்சு, வேல், சிலம்பம், களரி, குதிரை ஏற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான கலைகளையும் கிராமத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தேவேந்திரனை ஊக்கப்படுத்தி ஆதரவளித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாகவே மாபெரும் உலக அளவிலான பாரம்பரிய பள்ளியினை இந்த பகுதியில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அங்கு அழிந்து வரும் அனைத்து வகை மரங்களும், தானியங்களும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும், பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும், மீட்டெடுக்கும் உயரிய நோக்கமும் கொண்டு செயல்பட தொடங்கி உள்ளனர். அதன் முன்னேற்பாடாக பட்டுக்கோட்டையில் அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. அதனை உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி துவங்கி வைத்தார், பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு குத்து விளக்கு ஏற்றினார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர், மருத்துவர் சதாசிவம், சுவாமிநாதன், அரசு கல்வி நிறுவனர் நாடிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
64 கலைகள் பின்வருமாறு:
- ஆடல்
- இசைக்கருவி மீட்டல்
- ஒப்பனை செய்தல்
- சிற்பம் வடித்தல்
- பூத்தொடுத்தல்
- சூதாடல்
- சுரதம் அறிதல்
- தேனும் கள்ளும் சேகரித்தல்
- நரம்பு மருத்துவம்
- சமைத்தல்
- கனி உற்பத்தி செய்தல்
- கல்லும் பொன்னும் பிளத்தல்
- கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
- உலோகங்களில் மூலிகை கலத்தல்
- கலவை உலோகம் பிரித்தல்
- உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
- உப்பு உண்டாக்குதல்
- வாள் எறிதல்
- மற்போர் புரிதல்
- அம்பு தொடுத்தல்
- படை அணிவகுத்தல்
- முப்படைகளை முறைப்படுத்தல்
- தெய்வங்களை மகிழ்வித்தல்
- தேரோட்டல்
- மட்கலம் செய்தல்
- மரக்கலம் செய்தல்
- பொற்கலம் செய்தல்
- வெள்ளிக்கலம் செய்தல்
- ஓவியம் வரைதல்
- நிலச்சமன் செய்தல்
- காலக் கருவி செய்தல்
- ஆடைக்கு நிறமூட்டல்
- எந்திரம் இயற்றல்
- தோணி கட்டல்
- நூல் நூற்றல்
- ஆடை நெய்தல்
- சாணை பிடித்தல்
- பொன்னின் மாற்று அறிதல்
- செயற்கை பொன் செய்தல்
- பொன்னாபரணம் செய்தல்
- பொன் முலாமிடுதல்
- தோல் பதனிடுதல்
- மிருகத் தோல் உரித்தல்
- பால் கறந்து நெய்யுருக்கல்
- தையல்
- நீச்சல்
- இல்லத் தூய்மையுறுத்தல்
- துவைத்தல்
- மயிர் களைதல்
- எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்
- உழுதல்
- மரம் ஏறுதல்
- பணிவிடை செய்தல்
- மூங்கில் முடைதல்
- பாத்திரம் வார்த்தல்
- நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
- இரும்பாயுதம் செய்தல்
- மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
- குழந்தை வளர்ப்பு
- தவறினைத் தண்டித்தல்
- பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
- வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
- மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
- வெளிப்படுத்தும் நிதானம்