தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நவக்கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் – கலா தம்பதியரின் 9 வயது 5ஆம் வகுப்பு பயிலும் நிகிலேஷ்வரன் தொடர்ந்து 1 மணி நேரம் பத்மாசனம் நிலையில் தண்ணீரில் மிதந்து நோபல் உலக சாதனை படைத்தார்.
பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமூளை பன்முக விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியின்போது சிறுவன் நிகிலேஷ்வரன் தனது கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு தொடர்ந்து 1 மணி நேரம் பத்மாசனம் நிலையில் தண்ணீரில் மிதந்தார். அப்போது நீச்சல் குளத்தை சுற்றி பார்வையாளர்கள் நின்று கைதட்டி ஆரவாரம் செய்தது விண்ணையே அதிர வைத்தது. சிறுவன் நிகிலேஷ்வரன் தொடர்ந்து 1 மணி நேரம் பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து சாதனை படைத்த சிறுவன் நிகிலேஷ்வரனை சிறப்பு விருந்தினர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த சிறுவனது உலக சாதனையை நோபல் நிறுவனத்திலிருந்து செயல்முறை அலுவலர் வினோத் தலைமையிலான குழுவினர் வந்திருந்து நேரில் பார்த்து பதிவு செய்தனர். நோபல் உலக சாதனை படைத்த 9 வயது கிராமத்து சிறுவன் நிகிலேஷ்வரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
– நிருபர் கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை