தஞ்சை மாநகராட்சி நூற்றாண்டு கால பழமையானது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அதிமுக காலத்தில் தரம் உயர்த்தப்பட்டது. அப்படிப்பட்ட மாநகராட்சி ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். அதுபோல ஆடி மாதத்தில் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மாமன்ற அவசரக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மேயர் சண்.இராமநாதன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் மொத்தம் 50 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதில் ஒன்றுதான் காந்திஜி வணிக வளாகத்தில் கட்டப்பட்டு ஏலம் விடப்பட்ட கட்டிடம் தொடர்பான ஒன்று. நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் மற்றும் ஒப்பந்தம் ரத்து செய்வது குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து திமுக மாமன்ற உறுப்பினர் திரு.புண்ணியமூர்த்தி தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திரு.J.V.கோபால் அதிமுக உறுப்பினர் இந்த ஏலத்தில் முந்தைய ஆணையர் தவறு செய்திருந்தால் அவருக்கு துணையாக இருந்த மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார்.
அ.ம.மு.க.வின் மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கினியாள் அவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றார். திமுகவை சேர்ந்த R.K.நீலகண்டன் இந்த தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு திமுக உறுப்பினர் திரு.ஆனந்த் அவர்கள் இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்காமல் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை மாநகராட்சி கையகப்படுத்த வேண்டும் என்றார். மொத்தத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரிந்தது.
இதுபோல மற்றொரு சலசலப்பு தஞ்சை மாநகராட்சியில் ஏற்பட்டது. 36வது வார்டு பகுதிக்குட்பட்ட பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக அமமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணுக்கினியாள் அவர்கள் சாலை மறியலில் இறங்கினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தஞ்சை நகர தெற்கு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் மாமன்ற உறுப்பினர் அவர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு சரி செய்ய உதவியதாக மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்த இந்த மாநகராட்சியில் எந்தவித பணிகளும் தற்போது நடைபெறவில்லை. இந்த கழிவுநீர் பிரச்சனையை பலமுறை நான் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி நான் சாலை மறியலில் இறங்கினேன் என்றார்.
இந்த மாநகராட்சியில் நடைபெறும் சம்பவங்களை பற்றி எதிர்கட்சித் தலைவரும் மாநகராட்சி முன்னாள் துணைமேயருமான திரு.மணிகண்டன் அவர்களிடம் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்து முன்னாள் ஆணையர் அவர்களையும் மக்களுக்கு நன்மையும், தீமையும் கலந்தே செய்து உள்ளார். திரு.சரவணக்குமார் அவர்கள் ஆணையராக இருந்தபோது சிறு வணிகர்கள் பாதிப்படைந்து பெரும் வணிகர்கள் பலர் பலன் அடைந்து உள்ளனர். அதற்கு உதாரணமாக காந்திஜி வணிக வளாகத்தில் அடைந்துள்ள “ராமராஜ் காட்டன்” ஷோரூம் கட்டிடம் ஆகும். இந்த கட்டிட ஏலம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நிதி இருந்த போது செயல்பாடு ஸ்மார்ட்- ஆக இருந்தது. ஆனால் நிதி செலவழிக்கப்பட்டு முடிந்தவுடன் Slow City ஆக மாறிவிட்டது. மேலும் அவர்கள் கட்சி உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது நெல்லை, கோவை மற்றும் காஞ்சிபுரம் போன்று மாறவும் வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் மணிகண்டன் தெரிவித்த கருத்து தற்போது மாநகராட்சி உபரிநிதியிலிருந்து கடன்பிடியில் சிக்க தொடங்கியுள்ளது என்றார். இதுகுறித்து கருத்து அறிந்து கொள்ள மேயருடைய கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய கைபேசி ஒலித்து கொண்டே இருந்தது.
மொத்தத்தில் மேயர் அவர்கள் இந்த பிரச்சனை எதிர்கொண்டு சமாளித்து சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்பதே கட்சி மற்றும் பொதுமக்களின் எண்ணமும் அவரது கைபேசி போன்றே ஒலித்துக் கொண்டு இருக்கிறது.