மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-ம் ஆண்டு தஞ்சாவூர் காவல் சரகத்தை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியதின் தொடர்ச்சியாக, காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சரக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மத்திய மண்டல காவல் துறை தலைவர் க.கார்த்திகேயன், இ.கா.ப., தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக், இகாப மற்றும் காவல் அதிகாரிகளுடன் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
26.07.24-ம் தேதி மதியம் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கை திறந்து வைத்தும், பின்னர் சரக காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, தஞ்சாவூர் சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும் மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும், கணினி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சட்ட விரோதமாக விற்கப்படும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.
2024-ம் ஆண்டு தஞ்சாவூர் சரகத்தில் 215 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 293 எதிரிகள் கைது செய்யப்பட்டும். 775 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும், மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் 23-ஐ பறிமுதல் செய்தும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 11 எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2024-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 2732 முறை சோதனை செய்து, 1001 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1031 எதிரிகள் கைது செய்யப்பட்டும். 7214 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும். 836 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 150 முறை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள கடைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 337 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் பற்றியும் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள். விற்பனை செய்பவர்கள் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது இந்த வருடம் 15074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும். 15239 எதிரிகள் கைது செய்யப்பட்டும். 255 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டும், தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 373 வாகனங்களை அரசு முறைப்படி ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் Smart Kavalar APP என்ற செயலி மூலம் காவலர்களின் ரோந்து பணி, குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அழைப்பாணையை சார்வு செய்யும் பணி, நீதிமன்ற பணி மற்றும் காவலர்களின் அன்றாட பணிகளை நெறிபடுத்த காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தக்க அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள ரௌடிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களை கண்காணிப்பதற்காக தனி காவலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவுரை வழங்கினார். தஞ்சாவூர் சரகத்தில் 2024-ம் ஆண்டு 438 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்றும், 4 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணையை மீறியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலிலிருந்து பிணையில் வெளியில் வந்த 9 ரௌடிகளின் பிணையை ரத்து செய்தும், பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள ரௌடிகளுக்கு ஜாமீன் போட்ட 6 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 31 ரௌடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் சரகத்தில் உள்ள 7 ரௌடிகளின் சொத்துக்கள் குறித்து நிதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 ரௌடிகளுக்கு ஆயுள்தண்டனையும், 14 ரௌடிகளுக்கு கடுங்காவல் தண்டனையும் நீதிமன்றத்தின் மூலம் பெற்று தரப்பட்டுள்ளது.
27.07.24-ம் தேதி காலை, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் உள்ள காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடத்தி, முகாமில் 482 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் குறைகளின்மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து உடனடி தீர்வு கண்டார். தஞ்சாவூர் சரக மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்களில் திருடுபோன பொருட்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தும், மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரௌடிகளை கைது செய்தும். நற்பணி செய்த 67 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் தஞ்சாவூர் சரகத்தில் புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்புகள். காவல் நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பழுதுகளை கண்டறிந்து அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.