பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக இருப்பவர் குமரன். தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக-வில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் மாதாந்திர அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு நகர்மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சென்ற பிறகு ஆணையர் குமரன் நகராட்சி அலுவலர்களுடன் கூட்டம் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரவு எட்டு மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையின் டி.எஸ்.பி, நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி உள்ளிட்ட குழுவினர் நகராட்சி அலுவலகத்திற்கு திடீரென்று சோதனைக்கு சென்றனர்.
ஆணையர் அறை உள்ளிட்ட நகராட்சி வளாகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். இதில் உதவி பொறியாளர் மனோகரனிடமிருந்து ரூ. 84,000, ஒப்பந்ததாரர் எடிசனிடமிருந்து ரூ.66,000 பறிமுதல் செய்தனர். ஆணையரின் டிரைவர் வெங்கடேசனிடம் 8,000 கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்ததை அறிந்த அவர் அந்த பணத்தை நகராட்சி வளாகத்தில் கிடந்த அழுக்குத்துணியில் வீசி மறைத்துள்ளார். இதையும் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
அத்துடன் ஆணையர், வெங்கடேசனிடம் கொடுத்து வீட்டில் உடைகளில் மறைத்து வைக்க சொன்ன ரூ. 5 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதைதொடர்ந்து ஆணையர் குமரன் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை செய்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தம் ரூ. 6.54 லட்சம் பறிமுதல் செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் பேசினோம், “ப்ளான் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்திற்கும் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் இந்த லஞ்ச பணத்தை முக்கிய பொறுப்பில் உள்ள பலரும் பிரித்து எடுத்து கொள்வதாகவும் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டீம் சோதனையில் ஈடுபட்டது. நகராட்சி அலுவலகம், ஆணையர் வீடு, அவரின் டிரைவர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தோம். நகராட்சி வளாகத்தில் அழுக்கு துணிகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கபட்டிருந்த ரூ.8,000, ஆணையர் குமரன் டிரைவர் வெங்கடேசனிடம் கொடுத்து வைத்திருந்த 5 லட்சம் என மொத்தம் 6.54 லட்சம் பறிமுதல் செய்திருக்கிறோம்.
இது தொடர்பாக ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன் மீது வழக்கு செய்யபட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.