கழக உடன்பிறப்பு பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் நடு குளத்துக்குள்ளே நடப்பு வயல் என்றொரு போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இது வழக்கமான சினிமா போஸ்டர் தான் என்று கடந்து போயிருந்தோம். கொஞ்சம் ஊர்ந்து பார்க்கும் பொழுது தான் மிக வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கதை திரைக்கதை வட்டார வளர்ச்சி அலுவலர், வசனம் இயக்கம் வட்டாட்சியர், ஒளிப்பதிவு வருவாய் ஆய்வாளர், பின்னணி இசை வருவாய் கோட்டாட்சியர், பாடல்கள் கிராம நிர்வாக அலுவலர், நடனம் தலையாரி, சண்டை பயிற்சி துரை குணா, படத்தொகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தயாரிப்பு மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் என்றும் இன்று முதல் ரிசர்வேஷன் செய்யப்படும் என்று அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் கீழே குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு இந்த படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எங்களுக்கு ஒரு பத்து டிக்கெட் வேண்டும் என்று கேட்டதற்கு, இந்த போனை எடுத்துப் பேசிய துரை குணா அவர்கள் இந்த படத்தில் எனக்கு சண்டை பயிற்சி மட்டும்தான். உங்களுக்கு டிக்கெட் வேண்டுமென்றால் புரொடியூசர் தொடர்பு எண் தருகிறேன். தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள் என்றார்.. என்னடா இது சும்மா கேட்டதற்கு, இந்த மனிதர் இப்படி ஒரு பதிலை சொல்கிறாரே என்று அதிர்ந்து போக, சார் விஷயத்துக்கு வாங்க, இந்த போஸ்டரை ஒட்டிய நோக்கம் என்ன போஸ்டரை ஒட்டிய எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் துரை குணாவிடம் பேசினோம்..
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கிராமத்தில் இரண்டு நீர் நிலை குளங்களை மொத்தமா மூடி விவசாயம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் பல கட்டங்களாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த பயனும் அளிக்காத நிலையில், 2019ம் ஆண்டில் அன்றைக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்த பாலதண்டாயுதபாணியிடம் இது குறித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தேன். மறுநாளே வருவாய்த்துறை அனுப்பி குளத்தை பார்வையிட்டு அளவீடு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டார், அது அப்படியே நடந்தது.. அதற்குப் பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். அதுக்கு பிறகு நான்கு வருவாய் கோட்டாட்சியர்கள் மாறுதலாகி விட்டார்கள். இரண்டு மாவட்ட கலெக்டர் மாறுதலாகி விட்டார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு மட்டும் எடுத்த பாடு இல்லை. வேறு வழி இல்லாமல் நோட்டீஸ் ஒட்டுவது என்று முடிவு செய்து விட்டோம். நோட்டீஸ் ஒட்டுவதற்கு அனுமதி கடிதத்தையும் மாவட்ட எஸ்பி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் இருவருக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பினேன். கறம்பக்குடி காவல் ஆய்வாளரிடம் மட்டும் நேரில் சென்று கொடுத்தேன். வருவாய்த் துறையிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரப்படவில்லை. பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் சொல்லும் பொய்கள் எனக்கு இந்த தபாலே வரவில்லை எனக்கு இந்த விவரமே தெரியாது என்றுதான்? அதனால்தான் இந்த கடிதத்தை நேரடியாக வட்டாட்சியருக்கே அனுப்பினேன். பெரும்பாலும் வட்டாட்சியர் உள்ளிட்ட கீழே இருக்கக்கூடிய அதிகாரிகள் உண்மை நிலவரத்தை மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சொல்லுவதில்லை. நான் நோட்டீஸ் ஓட்ட போகிறேன் என்று கடிதம் கொடுத்த பிறகும் அவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை. அப்படி என்றால் இது மூலம் என்ன தெரிகிறது நோட்டீஸ் ஓட்டுனா ஒட்டிக்கோ என்பது தானே அர்த்தம்? இத்தோடு அல்லாமல் கழக உடன்பிறப்புகள் அதிகாரிகளுக்கு கொடுக்கும் அழுத்தம் வேறு?
என்ன பொறுத்த வரைக்கும் அதிகாரிகள் மீது வருத்தம் உண்டு. ஆனால் வன்மம் இல்லை. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இருக்கும் பொழுது நோட்டீஸ் ஒட்டுவதற்கு அனுமதி கடிதத்தை கொடுத்து இருந்தோம். நோட்டீஸ் ஒட்டும் நேரத்தில் கலெக்டர் அருணா வந்து விட்டாங்க என்ன செய்கிறது? கீழே இருக்கக்கூடிய அதிகாரிகள் எங்களிடம் பேச தயாரா இல்லை?
அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் கடமை உணர்ச்சி பொறுப்பு இல்லை. கனிம வளங்கள் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய வருவாய்த்துறை இதையெல்லாம் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டு எல்லாரும் வீட்டில் போய் தூங்குகிறார்கள். தலையாரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை அந்தந்த பகுதிகளில் தங்கி தான் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசு ஆணை. எந்த அதிகாரி எங்கே தங்கி உள்ளார் என்று விசாரித்துப் பாருங்கள். அவர்கள் சட்டத்தையும் அரசு ஆணைகளையும் எப்படி மதித்து நடக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்?
இப்பொழுது குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த மண்ணை எப்படி எடுப்பது, எதற்காக பயன்படுத்திக் கொள்வது என்ற வரையறை எல்லாம் இருக்கிறது. இங்கே வந்து பாருங்க.. என்ன லட்சணத்துல வண்டல் மண் எடுக்கப்படுகிறது என்று அதிமுக கட்சிக்காரர்கள் குளத்து புறம்போக்கை தான் பட்டா போட்டார்கள். ஆனால் கழக உடன்பிறப்புகள் குளத்தையே ஆட்டையை போடுகிறார்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு வழிவகை செய்யும் வகையில் அடுத்த வாரத்தில் புதிதாக வந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கலாம் என இருக்கிறேன் என முடித்துக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறையில் இரண்டாம் பாகம் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் சரிதான்…?