தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள், 4 மாதத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த அழகுமீனா, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர் கடந்த 19ம்தேதி பொறுப்பேற்று கொண்டார்.
தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையர் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறுகையில்; தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள குறைகள் குறித்து ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு குறைகள் உள்ளது. என்னை சந்தித்த மாமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்னைகள் இருப்பதாகவும், குப்பை, பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்குகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதை செய்தால்தான் வரும் மழை காலத்தை சமாளிக்க முடியும், மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த அனைத்தும் 4 மாதத்திற்குள்ள சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி என்பதால், இங்கு ஊழியர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். பல்வேறு பணியிடங்கள் இங்கு பெரும்பாலும் காலியாக உள்ளது. உதாரணத்திற்கு பொறியாளர் பிரிவில் 80 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 15 பேர் தான் உள்ளனர். விரைவில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும், குறைகளும் விரைவில் தீர்க்கப்படும். தாம்பரம் மாநகராட்சிக்கு தினசரி 73 எம்எல்டி தண்ணீர் தேவை உள்ளது. இதனை செம்பரம்பாக்கம், பாலாறு, மெட்ரோ போன்றவற்றில் இருந்து பெற்று விநியோகம் செய்து வருகிறோம். குடிநீர் பிரச்னையை போக்க 4000 கோடியில் ஒரு திட்டம் தயார் செய்து அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த பின்னர் தண்ணீர் பிரச்னை இருக்காது, என அவர் தெரிவித்தார்.