பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிரடிக்குப் பெயர்போன அருணின் பின்னணி என்ன? என்பவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகிலுள்ள சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் அருண். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 1998ம் ஆண்டில் முதல்முறையாக ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த அருண், 2002-ம் ஆண்டு வரை நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி கோட்டங்களில் உதவி காவல் கண்காளிப்பாளராகப் (ASP) பணியாற்றினார். அதன்பின்னர், பதவி உயர்வு பெற்று கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்தடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் திறம்பட செயலாற்றினார். அருணின் துரிதமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அவருக்கு பதவு உயர்வை பெற்றுத்தந்தது. 2012-ல் திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிவந்த அருண் 2016-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராகப் பதவி உயர்வு பெற்றார்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி என தான் பணியாற்றிய தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அருண் திறமையாக செயல்பட்டதால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார் அருண். ஏற்கெனவே, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் (CBCID) காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். இதையடுத்து, 2012-ல் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல்பிரிவு டி.ஐ.ஜியானார். அதன்பிறகு, சென்னை தெற்கு மண்டல சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, வட சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையரானார். பின்னர், சென்னை காவல் கூடுதல் ஆணையராகவும், காவலர் பயிற்சி பள்ளியின் ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார்.
2021-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்ற அருண், அங்கு சட்டவிரோதமாக கொடிகட்டிப் பறந்த லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். தொடர்ந்து, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2023-ல் ஆவடி மாநகர காவல் ஆணையரானார். அதன்பின்னர், கடந்த ஆண்டு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பேற்றவர் மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றங்களையும் காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தார். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான ரௌடிகளை கைது செய்து சிறையிலடைத்தார்.
சென்னை மாநகரின் 110-வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் டி.ஜி.பி அருண், “சென்னை மாநகரில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணி. ரௌடிகள் முற்றிலும் ஒடுக்கப்படுவார்கள். ரௌடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்!” என உறுதியளித்திருக்கிறார்.