தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன் என்பவர் அந்த ஊரில் உள்ள அரசு சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ள கல்வெட்டில் அருகில் உள்ள கோவிலில் மேற்கூரையின் உபயத்தை தான் செய்ததாகவும், அப்போது தான் வழக்கறிஞராகவும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகித்ததாகவும், கல்வெட்டில் தனது சொந்த செலவில் சமுதாய நலக்கூட முகப்பு வாயிலில் பகிரங்கமாக தான் வகிக்காத பதவிக்கு கல்வெட்டு வைத்துள்ளார்.
இது அந்தப் பகுதி மக்களிடையே ஏளனமாக பார்க்கப்பட்டாலும்… ஒரு மலிவான விளம்பரத்திற்காக இப்படி இல்லாத பதவியை இருப்பதாக கூறி, கல்வெட்டு வைக்கும் அளவுக்கு துணிச்சல் மிக்க ஆற்றல் படைத்தவராக இருக்கின்ற வழக்கறிஞர் பி.எம்.பூசத்துரை பாண்டியன் எந்தப் பின்புலத்தில் இவ்வாறு வைத்துள்ளார் என்பதை விசாரித்தபோது, அவர் அ.ம.மு.க கட்சியின் தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் நிர்வாகியாக இருப்பதாகவும், தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் மகன் முறை உறவு என்பது மட்டுமே உண்மையாகும்.
மற்றபடி இதுவரை ஊராட்சி மன்றத்தின் வார்டு கவுன்சிலர் பதவிகூட வகிக்காத வழக்கறிஞர் பஞ்சாயத்து தலைவியின் காசோலையில் ஒப்பமிடும் அளவிற்கும், குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவற்றில் தலைவியின் கையெழுத்தை இவரே போடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. மேலும் வஞ்சப் புகழ்ச்சிக்காக இவ்வாறு கல்வெட்டு வைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை..? என்ற விவரமும் புலப்படவில்லை.! இது பற்றி ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, அதற்கு அவர் ‘இப்படி முறைகேடாக கல்வெட்டு வைத்திருப்பதற்கு அதை எடுக்க வேண்டுமென்றால் சொல்ல முடியுமே, தவிர காவல்துறையால் வழக்கு ஏதும் பதிய இயலாது’ என்று விளக்கம் தந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
மேலும் பொதுமக்கள் மத்தியில் அப்போது யார் வேண்டுமென்றாலும் உயர் அதிகாரி என்றோ, மாவட்ட ஆட்சியர் என்றோ, ஏன் துணை முதல்வர் என்றோ கூட கல்வெட்டு வைத்துக் கொள்ள முடியுமா..? என்ற கேள்விக்கு விடை தெரியாத புதிராக உள்ளதாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாம், சில்லறை புறவு, பாட்டா குறிச்சி கிராமங்களை உள்ளடக்கி திருச்சிற்றம்பலம் கிராமத்தில் வைத்து இவர் கல்வெட்டு உள்ள அதே சமுதாய நலக்கூடத்தில் வைத்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. VAO, RI, BDO தாசில்தார் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சிக்கு மட்டும் அந்த கல்வெட்டை தாற்காலிகமாக மருத்துவத்துறையினரின் விளம்பரம் மூலம் மறைத்து வைத்த அவலம் காண்போரை மேலும் நகைப்புக்கு உள்ளாகி…
மேலும் அன்றைய தினம் இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. இதனை சீரியஸாக கண்டுகொள்ளாத அதிகாரிகளையும் என்னவென்று சொல்வது என்று தெரியாமல் விழிக்கும் பொதுமக்களுக்கு என்ன தீர்வினை தரப்போகிறது நிர்வாகம்..?
இது பற்றி மற்றொரு அரசியல் பிரமுகர் கூறும் போது… 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு காட்சியில் சொல்வது போல “நூறு ஆண்டுகள் கழித்து வரும் மடையர்களுக்கு தெரியவா போகிறது என் உடல் கட்டமைப்பு இதுவென்று” தனது உடல் கட்டமைப்பை வரைந்து வைத்திருப்பார். அதுபோலத்தான் தான் வகிக்காத பதவியை வகித்ததாக கூறி என்றும் அழியாமல் அரசு கட்டிடத்திலேயே கல்வெட்டில் பகிரங்கமாக பதித்திருக்கும் சம்பவத்தை பார்ப்பதாக அறிவு ஜீவிகள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இனி இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க… காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமா..? என்ற எதிர்பார்ப்பில் அவரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.