கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா. நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த பொழுது மிக சவாலான வேலைகளை செய்து காட்டியவர், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல ரிசார்ட் கட்டுமானங்களை அதிரடியாக அகற்றியவர். இப்படி பல அதிரடி நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரரான இவர் புதுக்கோட்டைக்கு பொறுப்பேற்று மறுவாரத்திலே நடு குளத்துக்குள்ளே நடவு வயல் என சினிமா பாணியில் ஒரு போஸ்டரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பறக்க விட்டு விட்டார் எழுத்தாளர் துரை குணா.
இந்த சினிமா போஸ்டர் மாடல் மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் கவனத்திற்கு போக, மொத்த அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வரச் சொல்லி இங்கே என்ன நடக்குது? நீங்களெல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? நோட்டீஸ் ஒட்டுவது குறித்து துரை குணா இரண்டு முறை அனுமதி தபால் கொடுத்திருக்கிறார். ஏன் அது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? மீட்டிங் என்றால் டீயையும், வடையும் சாப்பிட்டுவிட்டு மேசையை தேய்த்து விட்டு போகத்தான் வந்தீர்களா? என கலெக்டர் அதிரடியா டோஸ்விட, வழக்கம்போல் அதிகாரிகள் அதற்கு வளைந்து நெளிந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். இனிமேல் திங்கட்கிழமை மனுநீதி முகாம் முடிந்து மாலை 4 மணிக்கு மேல் மீட்டிங், இதில் மாவட்டம் தோறும் தாலுகா வாரியாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக எத்தனை மனுக்கள் வந்துள்ளது. எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வாராவாரம் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் வேறு ஏதும் சிக்கல்கள் இருந்தால் அதை தெரிவியுங்கள் நானே ஸ்பாட்டுக்கு வந்து அந்த ஆக்கிரப்புகளை எடுக்கிறேன் என கலெக்டர் தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்பொழுது வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் மீது நோட்டீஸ் ஒட்டிய எழுத்தாளர் துரை குணாவிடம் பேசினோம்..
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆற்றுப் பாசன வசதிகள் இல்லை. கல்லணை கால்வாய் பாசன தண்ணீர் கொஞ்சம் வந்தாலும் அது கடை கோடியில் வந்து கடலில் கலந்து விடுகிறது. இந்த மாவட்டத்திற்கான நீர் ஆதாரங்களே ஏரி குளங்கள் மட்டும்தான் மழைக்காலங்களில் இந்த ஏரி குளங்கள் நிரம்பினாலே விவசாயம் குடிநீர் போன்ற எல்லா அத்தியாவசியத்துக்கும் இதுவே போதுமானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 12,000 குளங்கள் இருக்கிறது. ஒரு குளம் நிறைந்தால் அந்த தண்ணீர் மறு குளம் சென்றடைந்து நிரம்பும் அளவிற்கு அக்காலத்தில் அனைத்து குளங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குளத்திற்கும் இன்னொரு குளத்திற்குமான நீர்வழிப் பாதைகள் இயற்கையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பராமரித்தாலே போதும் புதுக்கோட்டைக்கு என புதிய நீர் மேலாண்மை தேவை இல்லை.
நான் நோட்டீஸ் ஒட்டுவதற்கு அனுமதி கோரும் பொழுது கலெக்டர் மெர்சி ரம்யா இருந்தாங்க நோட்டீஸ் ஒட்டும் பொழுது கலெக்டர் அருணா வந்துட்டாங்க நாங்க என்ன செய்றது? நோட்டீஸ் ஒட்டுவது குறித்து கந்தர்வகோட்டை வட்டாட்சியரிடம் இரண்டு முறை கோரிக்கை மனு கொடுத்தும் அவர் செவி சாய்க்கவில்லை நாங்க எங்க வேலையை செய்து முடித்து விட்டோம்.
புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் மீது நான் நோட்டீஸ் ஒட்டினாலும், அதை அவர் பெருசா பொருட்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக போராடி வந்த எங்கள் கோரிக்கைகளை ஏற்று அவர் வந்த ஒரே வாரத்துக்குள் இரண்டு குளங்களையும் மீட்டுவிட்டார். அதுவே எங்களுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது, மாவட்ட ஆட்சியரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். ஆனால் கழக உடன்பிறப்புகள் விடுவார்களா எனதான் தெரியவில்லை? என்கின்றார்.