ஐயா ஐயனாரே உந்தன்
அடிமை நாங்கள் பாரே
பைந்தமிழில் பூவெடுத்து
பாமாலையாய்த் தொடுத்து
ஐயனை அலங்கரிக்க
அன்றாடங் காத்திருப்போம்
எண்திசையும் புகழ் மணக்கும்
இறைவன் பெயர் சொன்னால்
இறைவனின் மகிமைக்கு
ஈடில்லை புவிமீது
மண்ணைப் பிளந்துவந்து
மலர்புகந்தனைக் காட்டி
கண்ணின் மணிபோலே
காட்சி எமக்களித்தாய்
செம்மொழியின் பகைமுடித்து
சிங்கம்போல் நடைபோட்டு
மகுடந்தனைச் சூடி
மன்றத்தில் நீயமர்ந்தாய்
எங்களின் குரல்கேட்டு
எழுந்துமே நீ வந்தால்
முப்பாலில் தேன் கலந்து
தப்பாமல் நான் தருவேன்
அன்னைத் தமிழ் நிலத்தில்
அரசாள நீயுதித்தாய்
மண்ணாசைக் கொண்டவர்கள்
மாநிலத்தில் நிறைந்துவிட்டார்
விண்ணிலே உமதாட்சி
வெண்ணிலவுக் குடைப்பிடிக்கும்
வெண்சாமரை வீச விண்மீன்கள்
தவமிருக்கும்
பன்னீரைத் தான் தெளிக்க
மேகங்கள் திரண்டு வரும்
பாமாலை சூடுதற்கு
பக்கத்தில் நானிருப்பேன்
ஐயா ஐயனாரே உந்தன்
அடிமை நாங்கள் பாரே
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு,
பள்ளத்தான்மனை