தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சென்னியவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் ஏழை குறு விவசாயி. இவரது வயல் வெங்கரை கோட்டைக்காடு ஊராட்சியில் சென்னிய விடுதி சாலையோரம் உள்ளது. இவருக்கு சொந்தமான இந்த 70 செண்ட் நிலத்தில் வரும் நெல் விளைச்சலை கொண்டு தான் இவரது வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் வயலில் தேங்கும் மழை நீர் வெளியேறும் வகையில் சாலை ஓரம் உள்ள வாய்க்காலை அதிரடியாக மண்ணடித்து அடைத்து விட்டதாகவும் இதனால் மழைநீர் நீண்ட நாட்களாக அந்த வயலிலேயே தேங்கி கிடப்பதால் கருணாநிதியால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த குருவை சாகுபடி மற்றும் இந்த முறை சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் கடந்த ஆறு மாதகாலமாக இவரது குடும்பம் எந்த வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாய்க்காலை அடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த வாய்க்காலை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் வெளியேறும் படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தனது வாழ்வாதாரத்தை காப்பாற்ற தன்னைப் பழி தீர்க்கும் வகையில் வயல் வாய்க்காலை அடைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாய்க்காலை மீண்டும் பழையபடி தண்ணீர் செல்லும் அளவிற்கு சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.