திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி தாலுகா இராயநல்லூர் கோட்டகம் விவசாய மண்ணாய் விளை நிலங்களை பசுமை மாறாத அழகிய கிராமம். பாடுபட்டு உழைத்து சாப்பிட்டு வாழ்பவர்களின் தொங்கும் தோட்டம். அவ்வூரில் அன்றாடம் உழைத்து ஐந்து குழந்தைகளை பெற்று ஏழ்மையில் உழன்று எங்கள் எல்லோரையும் வாழவைத்த பெற்றோர் சின்னையன் தங்கம்மாள். ஐந்து பிள்ளைகளில் நடுப்பிள்ளை நான். அவ்வூரில் எனக்கு முன்பு படித்தவர்கள் யாரும் இல்லை.
ஐந்து வயது ஆனவுடன் அப்பா சிலேட்டு குச்சி, அரிச்சுவடி, சிலேட்டு ஆகியவற்றை ஒரு மஞ்சப்பையில் வைத்து என்னையும் அழைத்து அரசு ஆரம்பப்பள்ளி இராயநல்லூரில் கைப்பிடித்து அழைத்து கன்னத்தில் ஒன்று கொடுத்து பள்ளியில் சேர்த்தார். 1 முதல் 5 வரை அங்கே படித்தேன். அப்பள்ளியில் ஒரு பெரிய வாதா மரம் இருந்தது. மதிய உணவுக்கு அதன் உதவி அதைவிட பெரியது.
6லிருந்து 8 வரை இராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி இராயநல்லூரில் சேர்ந்தேன். அப்போது உள்ள ஆசிரியர்கள் பேசி, ஷேக், சாமியப்பா, சாமிநாதன், மகாலிங்கம், இராமநாதன், சோமசுந்தரம் போன்றவர்களின் ஆளுமையில் படிப்பு என்ற பரிசு எனக்கு கிடைத்தது. இடைஇடையே என் தந்தை வேலைக்கு அழைத்து செல்வார். சளைக்காமல் வேலை செய்வேன். இளமையில் படிக்கும் எண்ணமும் கழனி வேலைகளையும் என் பெற்றோர்கள் எனக்கு கற்று தந்தனர். எனது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாரும் படிக்கவில்லை. அதேபோல வாழ்ந்த கிராமத்திலும் யாருமே படிப்பதற்கு ஆர்வமில்லாமல் இருந்தனர். காரணம் ஏழ்மையின் சீற்றம். அன்றாடம் வயல் வேலைக்கு செல்வது அதில் வரும் காசை வைத்து அரிசி வாங்கி சமைத்து சாப்பிடுவது இதில்தான் கவனம் அதிகம் இருந்ததால் குழந்தைகளை வழிநடத்தும் நேரங்கள் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. அக்காலத்தில் நாங்கள் பஞ்சத்தில் வாழ்ந்தாலும் எனக்கு படிப்புக்கு வழிநடத்திய எனது தாய் தந்தையரே என் முதல் கடவுள். 9 லிருந்து 12 வரை கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அப்பா சேர்த்தார். படித்துக் கொண்டே கூலி வேலைகளும் செய்து குடும்ப கஷ்டத்திலும் சேர்ந்தேன்.
10வது படிக்கும் போது கணக்கில் தோற்றேன். அவ்வளவு வறுமையில் அப்பா, அம்மா என்னை விடவில்லை. திருத்துறைபூண்டி வாசன் டூடோரியலில் சேர்த்து படிப்பின் அருமையை புரிய வைத்தார்கள். பத்மநாபன் கணக்கு ஆசிரியர் எனது கல்வி வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொல்லலாம். அதன்பிறகு எனது படிப்பை யாரும் தடைபடுத்த முடியவில்லை. கணக்கில் வென்றேன். அதே பள்ளியில் 11வது சேர்ந்தேன். அப்போது அப்பாவிடம் 35 ரூபாய் கட்டி சேர்க்கிறீர்களா 105 ரூபாய் கட்டி சேர்க்கிறீர்களா என்று கேட்ட தலைமை ஆசிரியர் KVN அவர்களிடம் அப்பா பச்சை பெல்ட்டில் இருந்த 35 ரூபாயை எடுத்து கொடுத்து சேர்த்தார்.
12 வது வரை படிப்பில் வெற்றி வாகை சூடினேன். அப்பா, அம்மாவுக்கு வயல் வேலையிலும் உதவி செய்தேன். இளங்களை புவியியல் குடந்தையில் சேர்ந்தேன். அப்பா கடைசிவரை கல்லூரி வரை சேர்த்துவிட்டு கைகூப்பி பேராசிரியரை வணங்கி என் பையன் நல்லா படிப்பான். அவனுக்கு நல்வழி காட்டுங்கள் என்று சொல்லிவிட்டு சென்ற அந்த காட்சி இன்னும் ரத்த ஓட்டமாக செய்கிறது. விக்டோரிய ஜூபிளி விடுதியில் தங்கி மூன்று வருடங்கள் அரசு ஆடவர் கல்லூரியில் படித்தேன். ஆப்பிரிக்க புவியியல், தமிழ்நாடு புவியியல் இரண்டிலும் பல்கலைகழக முதலிடம் பெற்றேன். MSc Geography என் கல்லூரிக்கு வந்தது. அந்த வருடம் கொலைச் சம்பவம் நடந்ததால் எனக்கு மேல்படிப்பு கிடைக்காமல் தடைபட்டது. அப்போதுள்ள பேராசிரியர்கள் பீதாம்பரம், குமாரசாமி, காமராஜ், தமிழ்செல்வன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் சேருவதற்கு சொன்னார்கள். பொருளாதார நெருக்கடியில் தங்கையில் மூக்குத்தியை திருத்துறை பூண்டியில் விற்று மதுரை சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்தவாரமே சேர்வதற்கு ஆணை வந்தது. அப்போது பணம் இல்லை. ஒரு பெரிய மனிதரை நம்பினேன். அவர் ஏமாற்றி விட்டார். படிப்பு தடைபட்டது. பெற்றோர்கள் கண்ணீர் சிந்தினர். விவசாய வேலைகள் தொடர்ந்தது. ஒருநாள் பக்கத்து வீட்டு அண்ணன் ராகவீர் தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகம் அழைத்தார். பஸ்ஸீக்கு பணம் இல்லை என்றேன். அவர் போட்டு அழைத்து சென்றார்.
தஞ்சை ஆத்துபாலம் அருகே செல்லும் போது தஞ்சை ஆயுதப்படையில் காவல்துறைக்கு ஆட்கள் எடுத்து கொண்டிருந்தார்கள். தலைவிதி அழைத்து சென்றது. மனசு மாறியது. காவல்துறைக்கு சேர்வதற்கு உள்ளே நுழைந்தேன். 6000 பேர்கள் இருந்த மைதானத்தில் 5வதாக தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு நாளும் அம்மா கொடுத்த 10ரூபாய் என்னை ஆளாக்கியது. போலீஸ் பயிற்சிக்கு பாளையங்கோட்டை அனுப்பி வைத்தார்கள். அம்மாவுக்கு கேன்சர் தொற்றிக் கொண்டது. பயிற்சியின் போது அம்மா இறந்தார்கள். பயிற்சி முடித்து தஞ்சை ஆயுதப்படையில் சேர்ந்தேன். வாழவைத்த அம்மாவின் போட்டோ கிடைக்கவில்லை. கைகொடுத்த மனைவியை கரம் சேர்ந்தேன். கடைசி தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். சிக்கலில் இருந்த என் தம்பிக்கு அவனுக்கு பிடித்த மனைவியை துணை சேர்த்தேன். 10 ஆண்டுகாலம் காவலராய் பணி செய்தேன். கண்டேன் முத்துக்களாய் மூன்று குழந்தைகள்.
1997லே நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் கலந்து தஞ்சையிலே 86 பேர்களில் முதலாவதாக தேர்ந்தேன். பயிற்சி வீராபுரம். ஓராண்டு முடிந்து பேராவூரணியில் 6 மாத காலம் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்தேன். நேரடி உதவி ஆய்வாளராய் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பி முதல் பணி முருகன் அருளாய் திருத்தணி உதவி ஆய்வாளராய் சுழன்று வந்தேன். அதன்பிறகு செவ்வாய்பேட்டை, பள்ளிப்பட்டு, மீனம்பாக்கம் விமானநிலையம் போன்ற இடங்களில் பணி செய்து திரும்ப தஞ்சை மாவட்டம் வந்தேன். அதன்பிறகு பூதலூர், பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, திருச்சிற்றம்பலம் நெடுஞ்சாலை ரோந்து, கள்ளிப்பெரம்பூர் ஆகிய காவல்நிலையங்களில் உதவி ஆய்வாளராய் இருந்து அதன்பிறகு பணி உயர்வு பெற்று அம்மாபேட்டை PS-ல் காவல் ஆய்வாளராய் சேர்ந்தேன். பின்பு திருவெண்காடு, தஞ்சை குற்றப்பிரிவு, நடுக்காவேரி, வேதாரண்யம், தஞ்சாவூர் தெற்கு , குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, கடலோர காவல் குழுமம் பட்டுக்கோட்டை, தலைஞாயிறு ஆகிய காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராய் பணிபுரிந்து பதவி உயர்வு DSP உயர்ந்து தஞ்சை மாவட்ட குற்ற பதிவு கூடத்தில் சேர்ந்து பணிபுரிந்ததும் திருச்சி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவில் மாறுதலில் சென்று பணிபுரிந்தும் அதன்பிறகு வேதாரண்யம் உட்கோட்ட DSP யாக பொறுப்பேற்றேன். அதன்பிறகு நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவில் மாறுதலாகி பணிபுரிந்து மீண்டும் வேதாரண்யம் உட்கோட்ட DSP யாக பொறுப்பேற்று நல்ல நிலையில் பணிபுரிந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்து 31.12.2024ல் பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்து வருகிறேன்.
கஷ்டங்களை கண்டு துவண்டு இருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. நான் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு வழக்குகளை கண்டுபிடித்து உயர்அதிகாரிகளிடம் பல்வேறு சான்றுகள் பெற்று பாராட்டுகளை பெற்றுள்ளேன். சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயருக்கு சிறு களங்கமும் இல்லாமல் காவல்பணியும் சரி, குடும்ப பணியும் சரி சின்ன நெருடல் கூட இல்லாமல் வறுமையை தாண்டி, ஏழ்மையை தாண்டி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மந்திரத்தை மனதில் வைத்து பசியை போக்க பாடுபட்டு உழைத்து மனநிறைவோடு விடைபெறுகிறேன்.
நன்றி.!