
காவல் துறை சார்பில், ரூ.41.32 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.60.54 கோடியில் 910 வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.491.43 கோடி செலவில் 2,955 காவலர் குடியிருப்புகள், ரூ.58.01 கோடி செலவில் 49 காவல் நிலையக் கட்டிடங்கள், ரூ.122.40 கோடி செலவில் 18 காவல்துறை இதரக் கட்டிடங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, சிவகங்கை – திருப்பத்தூர், தஞ்சாவூர் – திருவையாறில், ரூ.18 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் 96 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ராமநாதபுரம் – தேவிபட்டினம், திருவாரூர் – நன்னிலத்தில் ரூ,1 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் 2 காவல் நிலைய கட்டிடங்கள் என ரூ.19 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல், இந்த அரசு பொறுப்பேற்றது முதல், தீயணைப்புத்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.35.64 கோடியில் 204 குடியிருப்புகள், ரூ.53.38 கோடியில் தீயணைப்பு நிலையங்கள், ரூ.2.45 கோடியில் 2 தீயணைப்புத்துறை கட்டிடங்கள், என ரூ.91.47 கோடியில் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை – துரைப்பாக்கம், அம்பத்தூர், மயிலாடுதுறை – பூம்புகார், திருச்சி – துறையூர், தேனி – கடமலைக்குண்டு, திருவள்ளூர் – பூந்தமல்லி மற்றும் ராணிப்பேட்டையில், ரூ.21 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரம் செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதுதவிர, காவல்துறை பயன்பாட்டுக்காக ரூ.5 கோடியில் 500 இருசக்கர வாகனங்கள், ரூ.27.09 கோடியில் 300 பொலிரோ வாகனங்கள், தீயணைப்புத் துறைக்காக ரூ.28.45 லட்சத்தில், 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும் 50 இருசக்கர வாகனங்கள் என ரூ.60.54 கோடி மதிப்பிலான வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்புத்துறை இயக்குநர் அபாஷ்குமார், காவலர் வீட்டுவசதிக் கழக தலைவர் சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
