
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், தேசிய ஜனநாயக கூட்டணில் 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் கூறியதாவது:-
வடஇந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழ் நாட்டிலே உறுதியான எந்த நிலைப் பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
அ.தி.மு.க.வும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பா.ஜ.க.வும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிற நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியது அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நான் தான் 2-வது பெரிய கட்சி என்று க்ளைம் செய்து இருக்கிறார். ஆகவே, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க., ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே 2-வது கட்சி யார் என்பதுதான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரியான சூழலில், தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது. தலைமை என்பது முக்கியமான விஷயம் தான். ஆனால் பொருந்தா கூட்டணி. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்படுகிற கூட்டணியை தவிர கொள்கை அடிப்படையில் பொருந்தா கூட்டணி. அதனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நடவடிக்கைகளில் முரண்பாடு இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையான கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறோம். ஆகவே இந்த கூட்டணியில் ஒரு வலு இருப்பதை உறுதிப்பாடு இருப்பதை நம்மால் காண முடிகிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற கட்சிகளுக்கிடையே இருக்கிற கூட்டணி அடிப்படையிலே கொள்கை பொருந்தா கூட்டணி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் கனியும். ஆனால் இன்னும் அதற்கான சூழல் அமையவில்லை. திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் ஒன்று பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கோரிக்கை வலுப்பெறும் என்றார்.
