தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சுபிதா என்ற மகளும், சுபிஷ் என்ற மகனும் உள்ளனர், கடந்த 2015ம் ஆண்டு சுதா இறந்து விட்டார். தொடர்ந்து கடந்த 2022 ம் ஆண்டு ஒரு வாகன விபத்தில் சுபிஷ் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் தந்தை ராஜேந்திரன் அன்றே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். தொடர்ந்து சுபிதா (20) பழஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் அவரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம், மாவட்டத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர தாசில்தார்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, தாய், தந்தையரை இழந்த 4 மாண விகள் மற்றும் ஒரு மாணவர் என 5 பேரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். இந்நிலையில் இதையறிந்த சுபிதா பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் தர்மேந்திராவை சந்தித்து எனது அப்பா, அம்மா, அண்ணன் மூன்றுபேரும் இறந்து விட்டார்கள். நான் தற்போது பழஞ்சூர் கிராமத்தில் உள்ள எனது பெரியம்மா வீட்டில் வசித்து வருகிறேன். முதல்சேரியில் நாங்கள் வசித்து வந்த இடம் எனது தாத்தா பெயரில் உள்ளது. எனவே அந்த இடத்தை எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு கோரிக்கை வைத்தார்.
உடனே தாசில்தார் தர்மேந்திரா, சுபிதாவின் கோரிக்’ கையை ஏற்று அதனடிப்படையில் இது குறித்து விசாரணை செய்து முதல்சேரி கிராமத்தில் சுபிதாவின் தாத்தா பெயரிலிருந்த இடத்தை சுபிதாவின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் சுபிதாவிற்கு பட்டா வழங்கினார்.
மேலும், பட்டுக் கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்கென்னடியை தொடர்பு கொண்டு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் சுபிதாவிற்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க கோரிக்கை வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி, கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் முதல்சேரியில் தற்போது பட்டா மாற்றம் செய்துள்ள சுபிதா இடத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டார்.
தொடர்ந்து முதல்சேரியில் புதிய வீடு கட்டுவதற் கான பூமி பூஜை நடந்தது. இந்நிலையில் சுபிதா, தாசில்தார் தர்மேந்திராவை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த நடவடிக்கையினால் தாசில்தார் தர்மேந்திரா மனிதநேயம் மிக்க வட்டாட்சியர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
