மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு வரை மிகச் சிறப்பான முறையில் 80 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் அனைத்திலும் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ.21.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோடியம்மன் கோயில் பகுதியில் இருந்து பைபாஸ் சாலையை முழுமையாக சீரமைக்க ரூ.7 கோடிக்கு நிதி கோரி அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அதுவும் அனுமதி கிடைக்கும் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த மேயர் சண்.ராமநாதன் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலை பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு வரை மிகச் சிறப்பான முறையில் 80 சதவீதம் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தஞ்சையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு தரமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்பு குடிநீர் அனைத்து பகுதியிலும் கிடைக்க செய்தோம். அதேபோல் தற்போது 80 சதவீதம் சாலைகள் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மீதமுள்ள 20 சதவீத சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன்படி தார் சாலைகளுக்கு ரூ.13.65 கோடி, கான்கிரீட் சாலைகளுக்கு ரூ.5.3 கோடி , புதிய பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ.2.47 கோடி என மொத்தம் ரூ.21.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் வைக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக பணிகள் தொடங்கி விரைந்து முடிக்கப்படும்.
இதேபோல் தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் பகுதியில் இருந்து பைபாஸ் சாலையை முழுமையாக சீரமைக்க ரூ. 7 கோடிக்கு நிதி கேட்டு அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டது. அந்த நிதியும் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த சாலைப் பணிகள் அனைத்தும் இரண்டு மாத காலத்திற்குள் முழுமையாகவும், தரமாகவும் நிறைவேற்றப்படும்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் திருக்கயிலாய வலம் வரும் பாதையை மேம்படுத்துவது, அப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது போன்ற பணிகள் தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி நிதியிலிருந்து செய்து தரப்பட உள்ளது.
மேலும் பெரிய கோயில் எதிரில் உள்ள கார் பார்க்கிங் சாலைகளும் மேம்படுத்தப்பட உள்ளன. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகளிலும் இரு புறமும் திறந்தவெளி கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். இதனால் முழுமையாக சாலைப்பணிகள் முடிந்த மாநகராட்சி என்று தஞ்சை இடம் பிடிக்கும். தற்போது வரை தஞ்சை பெரிய கோயில் சாலை உட்பட முக்கிய சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை உணர்ந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
