சென்னை, சைதாப்பேட்டை, ஜீனிஸ் ரோடு பகுதியில் அபய்சுந்தர், வ/35, த/பெ.சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். மேற்படி தங்க நகை கடையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த இராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த ரோகித் என்பவர் 07.05.2025 அன்று மீண்டும் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அபய்சுந்தர் கடந்த 13.05.2025 அன்று இரவு கடை ஊழியர் ரோகித் வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் அவரை போனில் தொடர்பு கொண்ட போது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது உடனே அபய் சுந்தர் சந்தேகத்தின் பேரில் கடையில் தங்க நகைகளை சரிபார்த்த போது சுமார் 385 கிராம் (சுமார் 48 சவரன்) எடையுள்ள சவரன் தங்க நகைகளுடன் ஊழியர் ரோகித் தலைமறைவானது தெரியவந்தது. இது குறித்து அபய்சுந்தர் J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்திடசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு.N.கண்ணன், இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில், அடையார் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், சைதாப்பேட்டை சரக உதவி ஆணையாளர் மற்றும் J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ரோகித், வ/24, த/பெ.துபல் சிங், அஜ்மிர், இராஜஸ்தான் மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 42.5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட எதிரி ரோகித் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
