புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பிற்கா சர்வேயர் ஒன்றிணைந்து குறிப்பிட்ட நபர்களிடம் ரேட் பேசி இதுபோன்று பட்டா மாறுதல் மற்றும் நில அளவையில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் என அனைவரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்து வரும் நிலையில் அதன் ஒரு கரும்புள்ளியாக நெடுவாசல் மேற்கு பகுதியில் நடைபெற்றுவரும் பட்டா முறைகேடுகள் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீர்நிலை புறம்போக்கு மற்றும் ஏழை மக்களின் நிலங்களை பட்டா மாற்றம் செய்து கொடுப்பது நெடுவாசல் மேற்கில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் புகார் கூறி வருகின்றனர். இதனால் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வடகாடு காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனால் வடகாடு காவல்துறையினர் சிவில் வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என்று சொல்லி புகார் கொடுக்க வருபவர்களிடம் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் அதேபோல நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கும் படலம் நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நெடுவாசல் மேற்கு மருத்துவர் தெருவில் நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பொது பாதையை தனி நபர் ஒருவர் அந்த பாதைக்கு பட்டா பெற்று பத்திரப்பதிவு செய்து விட்டோம் என கூறி விஏஓ மூகாம்பிகை மற்றும் பிற்கா சர்வேயர் குழுவினர் முன்னிலையில் பாதையை அடைத்து விட்டனர். இதனால் பாதையை இழந்த அந்த மூன்று வீடுகளில் இரண்டு வீடுகளில் உள்ள நபர்கள் பாதை இல்லாததால் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு குடி பெயரும் அவலம் ஏற்பட்டது. அத்தோடு விதவைப் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத சூழலிலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மூகாம்பிகையிடம் 100 ஆண்டுகளாக நான்கு குடும்பத்தார்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஒரு குறிப்பிட்ட தனிநபருக்காக நீங்களே வந்து பாதையை அடைக்கலாமா? இது பொதுப் பாதை தான் என நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
அத்தோடு கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து கோட்டாட்சியர் விசாரணை படி வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு இங்குள்ள ஊர் பொதுமக்களிடம் விசாரித்து இது பொதுப் பாதை தான் என உறுதி செய்து ஆக்கிரமிப்பு செய்த தனி நபரிடம் இந்த பாதையை அடைக்க கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றும் நீங்கள் தனி நபருக்கு ஆதரவாக உங்கள் முன்னிலையிலேயே இந்த பாதையை அடைத்துள்ளீர்கள். இந்த பாதையை திறந்து விடாவிட்டால் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து சாகப் போகிறேன் என அழுது கத்தியுள்ளார். அதற்கு விஏஓ மூகாம்பிகை அவர்கள் இந்த இடத்திற்கு பட்டா வைத்துள்ளார்கள். அதனால் இந்தப் பாதையை நீங்கள் அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஏஓ மூகாம்பிகை கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளாராம்.
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உரிய நேர்மையான நடவடிக்கையை மேற்கொண்டும் விஏஓ அராஜக போக்குடன் தன்னிச்சையாக செயல்பட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஏஓ மூகாம்பிகை மற்றும் சர்வேயர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுப்பாதையை மீட்டுக் கொடுக்கவும் வலியுறுத்தி விரைவில் சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
