தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூர் சாா்-பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய திடீர்சோதனையில் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், ஆய்வாளர்அருண் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் கொண்ட குழுவினா், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூர் பகுதியில் செயல்பட்டு வரும் சார்- பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய திடீர்சோதனையில், சார்- பதிவாளர் செல்வம் மேஜையில் இருந்து ரூ. 52 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
மேலும், அவரது அறையில் இருந்த பத்திர எழுத்தர் முருகனாந்தம், பத்திர எழுத்தர் உதவியாளர் வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் இருந்து ரூ.18 ஆயிரம் என ரூ. 70 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனா்.
கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்ற அடிப்படையில், சார்- பதிவாளர்செல்வத்திடம் சுமார் 5 மணிநேரம் போலீஸார் விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக போலீஸார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
