சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித் குமார். இவரை நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் முன்னிலையில் மாவட்ட மண்டல ஐஜி, எஸ்.பிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் பல்வேறு அறிவுறுத்தல் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ”சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பதிவிட்டு பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. எனவே அது போன்ற தவறான செய்திகளை பதிவிடும் நபர்கள் யார்? என உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக சிஎஸ்ஆர் பதிவு செய்து எஃப்ஐஆர் போட வேண்டும். இதில் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது. காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனைவரும் செல்லக்கூடாது. காவல் நிலையத்தில் பணியில் யாராவது இருக்க வேண்டும்.
மேலும் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. சிறப்பு தனிப்படையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தில் தேவையில்லாத கஸ்டடியில் வைக்க வேண்டாம். திருட்டு வழக்குகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் கைதிகளை ஆயுதங்கள் வைத்து தாக்கக்கூடாது. விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் முன் அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இனிமேல் காவல் நிலையத்தில் மரணங்கள் எதுவும் நிகழ கூடாது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெற கூடாது. அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டு ஆபத்தான பைக் சாகசங்கள் செய்ய அனுமதிக்கக் கூடாது. புகாரளிக்க வருபவர்களிடம் பேப்பர் வாங்கி வரக் கூறி அலைக்கழிக்கக் கூடாது. முக்கிய பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். குடும்பமாக செல்பவர்களிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது.
சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்போது லத்தியை பயன்படுத்தக் கூடாது. கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடு, மோதல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” என மண்டல ஐஜிக்கள், எஸ்பிக்கள், அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.
