சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமுதெருவில் வசித்து வரும் ரவிச்சந்திரன், வ/64, த/பெ.ரத்தினம் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 26.06.2025 அன்று சென்னையில் நகைகளை கொள்முதல் செய்து விட்டு இரவு சுமார் 7.40 மணியளவில் எழும்பூர், பாந்தியன் ரோடு, இருதய ஆண்டவர் சர்ச் அருகே சுமார் 131 கிராம் தங்க நகைகள், 1.250 கிலோ வெள்ளிப்பொருட்கள், பணம் ரூ.31,39,045/- அடங்கிய பையுடன் பேருந்துக்காக காத்திருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் மேற்படி ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்று அவரிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு ரவிச்சந்திரனை போரூர் அருகே காரிலிருந்து கீழே இறக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து ரவிச்சந்திரன் F-2 எழும்பூர் காவல்நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், இணை ஆணையாளர் கிழக்கு அவர்களின் ஆலோசனையின் பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்கள் நேரடி கண்காணிப்பில், எழும்பூர் உதவி ஆணையாளர் மற்றும் F-2 எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து மேற்டி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பிரபு (எ) கமல், வ/36, , சிவகங்கை மாவட்டம் 2.முத்து ராமலிங்கம், வ/45, சிவகங்கை மாவட்டம் 3. தீனா (எ) தினகரன், வ/36, சிவகங்கை மாவட்டம் 4.பிரேம்குமார், வ/38, சிவகங்கை மாவட்டம் 5.முத்துலிங்கம், வ/42, மேலூர், மதுரை மாவட்டம் 6.பிரபு, வ/42, காளையார் கோயில், சிவகங்கை மாவட்டம் ஆகிய 6 நபர்களை சிவகங்கை மற்றும் மானாமதுரையில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், வெள்ளி கட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், பணம் ரூ.6.50 லட்சம் மீட்கப்பட்டது. குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 7 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் புகார்தாரர் ரவிச்சந்திரன் வாரத்தில் 3 நாட்கள் சென்னை, சௌகார்பேட்டை வந்து நகைகளை வாங்கி விட்டு, ஆட்டோவில் எழும்பூருக்கு சென்று தனியார் பேருந்தில் காரைக்குடிக்கு செல்வதை, ஒரு வாரமாக மேற்கண்ட எதிரிகள் நோட்டமிட்டு, சம்பவத்தன்று ரவிச்சந்திரனை காரில் பின்தொடர்ந்து கடத்திச்சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் விசாரணைக்குப் பின்னர் (03.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
