கிராம நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி தெரியுமா? ஆன்லைனில் உள்ள வசதிகள் என்னென்ன? நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி வீட்டுமனை பட்டா வாங்குவது, அதற்கான வழிமுறைகள் என்ன? அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? அந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? 3 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்துக்கு, பட்டா வழங்க முடியாது என்ற தாசில்தார் வழக்கில் சென்னை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு நினைவிருக்கிறதா? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நத்தம் என்றாலே பொது மக்கள் குடியிருப்பாகும்.. இதுவே அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் நத்தம் புறம்போக்காக வகைப்படுத்தப்படும்.
கிராமத்திலுள்ள குடியிருப்பிற்கென ஒதுக்கப்பட்ட நிலத்திற்குதான், நத்தம் புறம்போக்கு நிலம் என்பார்கள்.. எனவே, கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது.
நத்தம் நிலம் பட்டா
இதுபோன்ற நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை அரசே செயல்படுத்தி வருகிறது. கிராமங்களிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ அல்லது நகரங்களிலோ நீண்ட காலமாக நத்தம் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்து, அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், நத்தம் பட்டா வேண்டி தாராளமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
அரசுக்கு சொந்தமான நத்தம் பகுதிகளில் குடியிருந்து, வீடுகட்டி உங்களுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும், அந்த வீட்டிற்கான ரசீது, எத்தனை வருடம் அந்த இடத்தில் அனுபவம் செய்து வந்தீர்கள், மின் இணைப்பு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
பட்டா எப்படி வழங்கப்படும்
ஆனால், நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு இடத்திற்கு வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தால், அந்த குறிப்பிட்ட இடம், ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும்.. அப்போதுதான், அந்த இடத்தை வருவாய் ஆய்வாளர், விஏஓ நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இதைவைத்தே, நத்தம் வீட்டுமனை பட்டாவை வட்டாட்சியர் வழங்குவர்.
அதேபோல, உங்களுடைய முன்னோர்கள் பெயர் அந்த சம்பந்தப்பட்ட புல எண்ணில் ஏற்கனவே பதிவாகியிருந்தால், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை புல எண்கள் தெரியாவிட்டால், சம்பந்தப்பட்ட விஏஓ அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம்.
2 பேர் விண்ணப்பித்தால்?
நீங்கள் குடியிருக்கு பகுதி, ஆட்சேபனைக்குரிய பகுதியாக ஏரி, குளத்துக்கு அருகில் இருந்தாலோ அல்லது மக்கள் பயன்பாட்டிற்குரிய நிலத்தில் ஆக்கிரமித்திருந்தாலோ, அந்த இடத்திற்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்க முடியாது..
அதேபோல, அந்த நத்தம் இடமானது வேறொரு தனிநபர் பெயரில் இருந்தாலும், அந்த இடத்திற்கு 2 நபர்கள் வீட்டுமனை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தாலும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கப்படாது.. இப்படி 2 பேர் விண்ணப்பித்தால், அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதை கோர்ட் தான் முடிவு செய்யும்.
eservices.tn.gov.in என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.. டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.
ஹைகோர்ட் தந்த தீர்ப்பு
சமீபத்தில் கிராம நத்தம் தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.. அதாவது, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ராஜேந்திரன், சுப்பிரமணியன் கிராம நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி விண்ணப்பித்திருந்தனர்..
3 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்துக்கு, பட்டா வழங்க முடியாது என தாசில்தார் விண்ணப்பங்களை நிராகரித்தார்… எனவே இதனை சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு இதுதான்:
அரசு புறம்போக்கு நிலங்கள்
“கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு 1905 ஆண்டு நில ஆக்கிரமிப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே யாரும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாட முடியாது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
ஆனால், சட்டத்தின் கீழ், அரசின் அதிகாரம் என்பது, நில வருவாய் நிலுவைத் தொகையை வசூலிப்பதை தவிர, அதற்கு மேல் எதுவும் இல்லை என, கடந்த 1903ம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
நிலம் கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினாலோ அல்லது உச்சவரம்புகளை மேற்கோள் காட்டியோ, பட்டா கோரும் நபர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டியதில்லை.
உச்ச வரம்பு நிலங்கள்
தனி நபர்கள் பட்டா கோரும்போது, அதில் குடியிருக்கின்றனரா அல்லது காலி நிலமா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும். கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தம். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அரசு அகற்றலாம். இது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்தார்.
கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு, உச்ச வரம்புகளை காரணம் காட்டி, நிலங்களுக்கு பட்டா வழங்க மறுக்க முடியாது என்று ஹைகோர்ட் தெளிவுபடுத்தியிருந்தது பலரது கவனத்தையும் பெற்றது நினைவிருக்கலாம்.
