பட்டுக்கோட்டை வட்டம், சிவன் கொல்லை தெரு, பழஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும்
செல்வி.மேகலா (ஆதார் எண்.881625695008) என்பவர் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் தந்தையர் வனரோஜா முருகன் என்பவர்கள் இவர் சிறுவயதாக இருக்கும்போது இறந்து விட்டனர். தற்போது இவரது பாட்டி வடுவம்பாள் என்பவரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்த மாணவிக்கு பிறப்புச் சான்று, வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் அடிப்படையிலும் 30.07.2025 அன்று மாலை 5.00 மணியளவில் மேற்காணும் மாணவிக்கு உடனடியாக சான்றுகளை வழங்க மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் 31 .07. 2025 காலை 10 மணிக்கு இந்த மாணவிக்கு தேவையான வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று ஆகியவைகளை உடனடியாக பள்ளிக்கு சென்று வட்டாட்சியர் தர்மேந்திரா வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர், தம்பிக்கோட்டை வருவாய் ஆய்வாளர், பழஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர். இவர் 21.07.2010 சம்பைபட்டினம் கிராமத்தில் பிறந்துள்ளதால் அங்கு பிறப்பு பதியப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து இல்லை எனில் பதிவில்லா சான்று பெற்று ஒரு வார காலத்திற்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மாணவியின் பெயரினை இவரது பாட்டி வடுவம்பாள் என்பவரின் குடும்ப அட்டையில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
வட்டாட்சியர் தர்மேந்திரா அவர்களுக்கு மாணவியும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.
