தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களில் ஒன்றான ஓட்டங்காடு உக்கடை நவக்கொல்லைக்காடு கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து இங்கு வசித்து வரும் இந்து பறையர், வண்ணார், நாவிதர், செட்டியார், கள்ளர், யாதவர், முத்திரையர் என அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான வகையில் அனைவரும் பயன்படுத்தும் முறையில் ஒரே ஒரு சுடுகாடு தான் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஒரே கட்டிடம் இருந்து வந்ததன் காரணமாக காலப்போக்கில் மிகவும் சேதம் அடைந்திருந்தது. மேலும் அரசு துறை சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்றும் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் துறை அனுமதி பெறப்பட்டிருந்தது.
ஊராட்சி தலைவர் முன்பின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று முன் அனுபவம் இல்லாத ஒருவர் என்ற காரணத்தினாலும், தனது விருப்பு வெறுப்புகளை தனது அதிகாரம் கொண்டு தீர்த்துக் கொள்பவர் என்பதாலும் ஊர் கூட்டம் அல்லது தீர்மானம் எதுவும் போடப்படாமலும், ஊர் மக்களிடம் எந்த விதமான முன் அறிவிப்பும் வழங்காமலும் சேதமாகி இருந்த மயான கட்டிடம் கடந்த 2021ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக வந்த சுடுகாட்டு கட்டிட அனுமதி ஆவணத்தில் ஆதிதிராவிட சுடுகாடு என்று இருப்பதாலும், சுடுகாட்டிற்கான இடம் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் பகுதிகளில் உள்ளதாலும் மற்ற சாதியினர் சுடுகாட்டை கட்ட அனுமதிக்கவில்லை.
இந்த பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவர் இரு தரப்பினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த தவறியதோடு தான்தோன்றித்தனமாக செயல்பட்டு தான் நவக்கொல்லைக்காட்டிற்கு தலைவர் இல்லை என்று கூறியது வரலாறு. அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட திட்ட அலுவலர் பதவியில் ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் இருந்தபோது இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் புதிய கட்டிட வேலைகள் துவங்கப்படாமல் இன்று வரை இடிக்கப்பட்ட கட்டிடம் மண்ணோடு மண்ணாகி வெட்ட வெளியாகிவிட்டது.



இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 -ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்.
மாவட்டத்திற்கு 3 ஊர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டது.
“முன் மாதிரியாக உள்ள சிற்றூர்கள் பட்டியலில் முதலில் இந்த ஊர் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் இதே போன்று இதற்கு முன்னால் இருந்த ஆட்சி காலத்தில் ஒற்றுமையாக இருக்கும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக சமத்துவ சுடுகாட்டிற்காக இந்த கிராமம் பரிசு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நாமே நமது இதழில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து ஒட்டங்காடு ஊராட்சி தலைவரை நான்காண்டு கால சாதனைகள் என்று தகுதியின்மையை குறிக்கும் சான்றாக நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு இந்த மயானம் தொடர்பான செய்தி உட்பட கடந்த ஆண்டு நவம்பர் மாத இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
திராவிட மாடல் விடியல் ஆட்சி பொறுப்பேற்று ஆட்சி முடியப்போகும் நிலையில் தற்போதாவது இந்த மயானத்திற்கு விடிவு பிறக்குமா? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்? கவனத்தில் கொள்வாரா மாவட்ட ஆட்சியர்?
