சென்னை, சைதாப் பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48, த/பெ.கணேசன் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்த போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 பெண்கள் மேற்படி சரவணன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸை திருட முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட சரவணன் சத்தம்போடவே அருகிலிருந்த பொதுமக்கள் மேற்படி 4 நபர்களையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1.சோனம், பெ/36, மத்தியபிரதேச மாநிலம், 2.நேகா, பெ/35, மத்தியபிரதேச மாநிலம் 3.சாவித்திரி பாய், பெ/36, மத்தியபிரேதச மாநிலம் 4.மோகினிபாய், பெ/45, மத்தியபிரதேச மாநிலம் என்பது தெரியவந்தது.
மேலும் இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.




மேலும் விசாரணையில் எதிரிகள் இரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் எதிரி சோனம் மீது 8 வழக்குகளும், நேகா மீது 1 வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் 4 நபர்கள் விசாரணைக்குப்பின்னர் (31.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
