பட்டுக்கோட்டை அருகே கழுகுபுலிக்காட்டில் சாலை, மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகுபுலிக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கழிவறை வசதி இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரியாறு பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளதாகவும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதனால் வயதுக்கு வந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்புகட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து மிகமோசமான நிலையில் உள்ளன. சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
