கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் தொடங்கி பிரதமர் வரை இச்சம்பவத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததே அசம்பாவிதத்திற்கு காரணம் என தமிழக வெற்றி கழகமும், விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாததே விபத்துக்கு காரணம் என தவெக மீது தமிழக அரசும் என பரஸ்பரம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றன. தமிழக அரசு மற்றும் தவெக சார்பில் நீதிமன்றத்தில் மாறி மாறி முறையிடப்பட்டுள்ளன.
சம்பவத்தன்று விஜய் கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் பயணிக்கும் போதே அசம்பாவிதம் தொடர்பான செய்தி அவருக்கு சென்றடைந்துவிட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிட்ட நிலையில், தற்போது சூழல் நமக்கு சாதகமாக இல்லை. மருத்துவமனையில் திமுக அமைச்சர்கள், அவர்களது ஆதரவாளர்கள் குவிந்துவிட்டனர். நாம் தற்போது அங்கு சென்றார் அவர்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைக்கு சென்னைக்கு செல்வதே நல்லது என விஜய்யின் ஆலோசகர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
இதனிடையே சம்பவத்தன்றே முதல்வர், திமுக அமைச்சர்கள், அடுத்த தினமே எதிர்க்கட்சி தலைவர் என பல அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆனால் விபத்துக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் விஜய் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது கரூர் செல்வதற்காக விஜய் தயாராகியுள்ளார். கரூர் செல்வதற்கான பணிகளை தீவிரப்படுத்துமாறு விஜய் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரை அணுகி அனுமதி கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் தவெக.வுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட உதவி வழங்கும் வகையில் 20 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், 15 மாவட்டச்செயலாளர்கள், 5 வழக்கறிஞர்கள் இடம்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
