கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்திச் சென்ற வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் மடக்கி பிடித்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வர்யா வாகனத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஆத்தங்கரைவிடுதி, திருமணஞ்சேரி, மழையூர் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில மணல் கடத்தல் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தாலும் மணல் கடத்தல் தொடந்து இந்தப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா திருமணஞ்சேரிஆர்ச் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது 1 யூனிட் ஆற்று மணல் ஏற்றிச்சென்ற பொலிரோபிக்அப் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த வாகனம் நிறுத்தப்படாமல் அதிவேகமாக திருமணஞ்சேரி ஆர்ச்சிலிருந்து சென்றுள்ளது. அந்தவாகனத்தை தனது வாகனம் மூலம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மணல் கடத்தி சென்ற வாகனத்தை சுக்கிரன்விடுதி கிராமத்தில் பிடித்தார். வாகனத்தை பிடித்த நிலையில் மணல் கடத்தி வந்த வாகன ஓட்டுநர் வாகனத்தை விட்டுவிட்டுதப்பி சென்றுள்ளார். வாகனத்தை கைப்பற்றிய வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வர்யா கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் அன்று இரவு 6 யூனிட் ஆற்று மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியை தப்ப விட்டுள்ளார் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மணல் கடத்திச் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக கறம்பக்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
