குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத, பதிவுசெய்யப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு இது தொடர்பான விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவார் விளம்பரங்கள் கொடுத்ததற்கான ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் பகிரங்கமாகத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி பாஜகவின் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “தங்கள் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சி சானல்களிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர் படிவம் 26இல், குற்ற விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிப்பதுடன் தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவலையும், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தகவலை அரசியல் கட்சிகள், தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி குறித்த தகவல்களை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களாக அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.
குற்றப் பின்னணி விவரங்களை நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்யாத வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். குற்றப் பின்னணி விவரங்களை விளம்பரங்களாக வெளியிடாத, வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு எதிராக மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இம்மாதிரியான விதிமுறைகளை 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் முறையாகப் பின்பற்றவில்லை. மக்கள் அதிகம் பார்க்காத டிவிக்கள், அதிகம் வாசிக்காத நாளிதழ்கள் என தங்கள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட்டு ஆட்டையக் கழித்தன. இதனால் கொந்தளித்த அஸ்வினி உபத்யாயா, தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அவமதித்தாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேர்வுசெய்ததும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள், விவரங்களைத் தங்கள் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும். அதோடு, கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள வேட்பாளர்களைத் தேர்வுசெய்தது ஏன், என்பதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும்.
வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, முக்கியமான தேசிய நாளிதழ், பிராந்திய நாளிதழ் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். அந்த விளம்பரங்கள் வெளியிட்ட 72 மணி நேரத்துக்குள் அதுபற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல்செய்ய வேண்டும். இதை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் கமிஷன் அதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்த உத்தரவைப் பின்பற்றவே இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கிறது.