சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து, முகக்கவசங்கள் வழங்கி, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார்.
போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க காவல்துறையினர் அனைத்து காவல் எல்லைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை அடையார் காவல் மாவட்டம், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை காவல் உதவி மையம் அருகில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் தடுப்பூசி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஓட்டி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார், அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் நோய் தடுப்பு பொருட்களை கமிஷனர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை டாக்டர் பரணிதரன், தென்சென்னை காவல் கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் லட்சுமி, அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன், தென்சென்னை போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனர் தீபாசத்யன், திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத், பரங்கிமலை துணைக்கமிஷனர் பிரபாகர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.