தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், இது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், போலீஸ் ஏட்டு இளவரசன், போலீஸ்காரர் கவுதமன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இவர்களுக்கு உதவியாக தஞ்சை சிறப்பு தனிப்படையை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் டேவிட், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டுகள் சிங்காரவடிவேல், கோதண்டம் ஆகியோரும் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த தனிப்படையினர் கும்பகோணம், தஞ்சை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வந்த லாரியும் சிக்கியது. அந்த லாரியில் இருந்து 15 கிலோ கஞ்சா மட்டுமே சிக்கியது. இதே போல் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தஞ்சை, கும்பகோணத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் கஞ்சா விற்பனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த, பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திலும், 4 பேர் கும்பகோணம் போலீஸ் நிலையத்திலும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை, கும்பகோணம் மற்றும் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.