பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட எதிரிகள், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், லோன் வாங்கி தருவதாகவும் கூறியதை நம்பிய, கனகலட்சுமி ரூ.82,000/- பணத்தை எதிரிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் லோன் பெற்று தராததால், ஏமாற்றமடைந்த கனகலட்சுமி சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்ததின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.பி.சி.தேன்மொழி, இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்பேரில், துணை ஆணையாளர் திருமதி.ஜி.நாகஜோதி ஆலோசனையின்பேரில், கூடுதல் துணை ஆணையாளர் திரு.ஆர்.பாண்டியன் நேரடி கண்காணிப்பில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் திரு.பிரபாகரன் தலைமையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திரு.புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் திரு.அசோக்தாமஸ்துரை, திரு.பிரேம்குமார், தலைமைக் காவலர்கள் திரு.ஜெகநாத், திருமதி.விஜயா, திருமதி.சாந்தி, முதல்நிலைக் காவலர் திருமதி.சாஹிலா, காவலர்கள் மோகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த 1) அசோக்குமார், 2)காமாட்சி, 3) ராஜ்வேல் மற்றும் 4) அபிஷேக்பால் ஆகிய 4 நபர்களை கைது செய்து, ரூ.8 லட்சம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 04.09.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.