திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து, 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, 14.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையரை பிடிக்க, போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி, ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. ‘சிசிடிவி’ பதிவுகள் மூலம், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட, நான்கு பேர் சென்னை ரயிலில் அதிகாலையில் தப்பி சென்றது தெரியவந்தது.
போலீசார் கூறியதாவது: நகை கடைக்குள் நள்ளிரவு, இருவர் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். ‘சிசிடிவி’ கேமரா மற்றும் மின் இணைப்பை துண்டித்தனர். கடைக்குள் இருந்த மற்றொரு ‘சிசிடிவி’ கேமராவை அவர்கள் கவனிக்கவில்லை. இருவரும் முகமூடி மற்றும் தலையில் தொப்பி அணிந்திருந்தனர். திடீரென ஒருவர் முகமூடியை கழற்றிய காட்சி பதிவாகியிருந்தது. அதிகாலையில் திருவனந்தபுரம் – சென்னை செல்லும் ரயிலில், கொள்ளையர் நான்கு பேரும் தப்பி சென்றுள்ளனர்.
ரயில்வே போலீஸ் மற்றும் ஆர்.பி.எப்., போலீசார் உதவியோடு கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்தபோது, நால்வரும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தது தெரியவந்தது. மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் செல்லக்கூடிய ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில், நான்கு பேரும் ஏறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், பல்லார்ஷா ஸ்டேஷனில், ஆர்.பி.எப்., போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
ஸ்டேஷனை ரயில் அடைந்ததும், ரயிலில், கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்துடன் இருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் அலாம், 37, பத்ருல், 20, முகமது சுப்ஹான், 30, திலாகாஸ், 20 ஆகியோரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சந்தர்பூர் கோர்ட்டில், இவர்களை ஆஜர்படுத்தி, தனிப்படை போலீசார் சென்னை வழியாக, திருப்பூருக்கு அழைத்து வர உள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் தெரிந்த 4ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாநகர போலீசார் விரைந்து செயல்பட ஆரம்பித்தனர். போலீஸ் கமிஷனர் பாபு, தனிப்படையினருக்கு அடுத்தடுத்து துரிதமாக ஆலோசனைகளை வழங்கினார். 20க்கும் மேற்பட்ட ‘சிசிடிவி’ பதிவுகளை விரைந்து பார்வையிட்டனர்.
சென்னை, மகாராஷ்டிரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.எப்., போலீசாரிடம், மாநகர தனிப்படை போலீசார் பேசி உஷார்படுத்தினர். இதனால், ரயிலை விட்டு இறங்கும் முன்பே, ஓடும் ரயிலில் கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையாளர் அணில்குமார், வடக்கு காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் ஐந்து தனிப்படை காவலர்களையும், போலீஸ் கமிஷனர் கிநி பாபு அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.