தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பும் மனு இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் காவல் துறையில் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து காவல்துறையின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தையும் கணினி மூலம் அனுப்ப இ-ஆபிஸ் எனும் தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி காவல் துறை இயக்குனர் அவர்கள் கவுரவித்து வருகிறார். இதில் கடந்த பிப்ரவரி- 2022 மாதம் இ-ஆபிஸ் மூலம் அதிக அளவில் கோப்புகளை பதிவேற்றம் செய்தும், கோப்புகளை முடிவுக்கு கொண்டு வந்ததில் கோவை மாவட்ட காவல்துறை தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இச்செயலை பாராட்டும் விதமாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர் முத்துசாமி இ.கா.ப., வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களை வெகுவாக பாராட்டி பரிசுப் பொருள்கள் வழங்கி ஊக்குவித்தார்.