05.03.2022 அன்று காலை 07.45 மணிக்கு, மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டிலிருந்து தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும். சிறுமியின் தந்தை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு கொடுத்த புகார் மனு மீது Girl Missing பிரிவில் வழக்கு பதிவு செய்து உடனடியாக சென்னை பெருநகர காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் ஆணையின்படி, கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப அவர்களின் அறிவுரைபடி, இணை ஆணையாளர் (தெற்கு) நரேந்திரன் நாயர் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில். பரங்கிமலை மாவட்டம் காவல் துணை ஆணையாளர் பிரதிப், இ.கா.ப அவர்களின் கண்காணிப்பில், மடிப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் பிராங்க் டி ரூபன் மற்றும் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் அவர்களின் வழி நடத்தலின்படி, மடிப்பாக்கம் உதவி ஆய்வாளர் நிர்மல் மற்றும் காவலர் (எண் 49559) கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சிறுமி வைத்திருந்த செல்போன் எண்ணை கொண்டு சென்னை பெருநகர காவல் சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்து Tower Location கண்டறியப்பட்டதில் மேற்படி செல்போன் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. உடனடியாக தனிப்படையினர் மேற்படி இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் புகைப்படத்தை வைத்து நண்பகல் 12 மணியளவில் சிறுமியை மீட்டனர்.
மேற்படி பள்ளி சிறுமியை விசாரணை செய்தபோது, தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருவதாகவும் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் வாங்கி கொடுத்த smart செல்போனை வைத்து அடிக்கடி Instagram appஐ பார்த்து வருவதும் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருந்ததும் செல்போனில் கொரியன் நடனத்தை அதிகம் ரசித்து பார்ப்பதும் கொரியன் நடனத்தை கற்றுக்கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதும் தெரிய வந்தது.
படிக்கும் நேரத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும் என பெற்றொர் கண்டித்ததாலும் கொரியன் நடனம் மீது உள்ள ஆர்வத்தாலும் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதும் தெரியவந்தது.
மடிப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் மேற்படி சிறுமிக்கு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். காணாமல் போன பள்ளி சிறுமியை புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் மீட்ட மடிப்பாக்கம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.