சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக, இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னையில் ஆங்காங்கே சில குற்றச்சம்பங்கள் நடைபெறுகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு குற்றங்கள், 25 சதவீதம் குறைந்து உள்ளன.
பள்ளி, கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை, காவல் துறை கண்காணித்து வருகிறது. போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். போதை பொருட்களுக்கு எதிராக, 240 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் போதை பொருட்களுக்கு எதிரான தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்கள் மற்றும் வழித்தடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில், போலீசார் பாதுகாப்புக்காக பயணிப்பது போல, மாநகர பஸ்களிலும் இரவு நேரங்களில், போலீசார் பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.