4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் கிருத்திகா (வ/38) என்பவர் கடந்த 25.03.2022 அன்று இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் கிருத்திகா கழுத்தில் அணிந்திருந்த 4 லு சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்து கிருந்திகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தும், அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் அதில் பதிவான எதிரியின் இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு தீவிர விசாரணை செய்தும், மேற்படி பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திவாகர் (வ/26) நெய்வேலி, கடலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட திவாகர் டிப்ளமோ படித்துள்ளதும், கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னை வந்து பெருங்குடி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கி வேலை தேடிவந்ததும், சரியான வேலை கிடைக்காததால் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.