திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
திருச்சியில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே திருச்சிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வர் பங்கேற்ற கூட்டம் முடிந்தபின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன், திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர்கள் சரவணசுந்தர், கயல்விழி மற்றும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாவட்டங்களில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்வது, நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது, காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உரிய விசாரணை நிவாரணம் அளிப்பது, பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவு குறித்து ஆலோசனை, நிறைவாக ரௌடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.