வணிகர்கள் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாகவே தமிழக வியாபாரிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏகப்பட்ட அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கடைகளில் வியாபாரிகளை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், பொருள்களை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.. எனவே, இவர்களுக்கு பாதுகாப்பு தர தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிப்பதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசரக் காலங்களில் காவல் துறையின் உதவியை உடனடியாகப் பெறும் வகையில், 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் “காவல் உதவி” ஆப் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, தொடங்கிவைத்தார். ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் அனைவரும் இதை எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இப்போது இதில் வணிகர் உதவி என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி குறித்து முதல்வர் அன்றைய தினம் பேசும்போது, “காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும்.. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவல் உதவி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த செயலி தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது: “திருச்சியில் கடந்த மாதம் 5ஆம் தேதி வணிகர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், வணிகர்கள் காவல் துறையினரிடம் எளிதில் புகார் அளிக்க வசதியாக, காவல் உதவி செயலியில், வணிகர் உதவி வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, வணிகர்கள் காவல் துறையினரின் அவசர உதவியை நாட ‘வணிகர் உதவி’ என்ற வசதி, காவல் உதவி செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம், ரவுடிகளால் ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள், மாமூல் வசூலித்தல், தாக்குதல், கடை மற்றும் கிடங்கில் திருட்டு, கந்து வட்டி, கடையில் வாக்குவாதம், சண்டை உள்ளிட்டவை தொடர்பாக புகார்களை அளிக்க முடியும். எனவே, வணிகர்கள் அனைவரும் காவல் உதவி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம்” என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பானது வியாபாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.