திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 24 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகன் பாஸ்கரன், சென்னையில் இருந்து தனது சொகுசு இனோவா காரில், பொள்ளாச்சிக்கு கடந்த 28-ம் தேதி, சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கார்டன் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் பரத் என்ற இளைஞர், காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது மூலனூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், காரை வழிமறித்துள்ளார். பின்னர், பாஸ்கரனை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு, இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பாஸ்கரன் பலத்த காயம் அடைந்தார். மேலும், அந்த நபர், காரில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 24 சவரன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்த தப்பிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மூலனூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பாஸ்கரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழிபறி கொள்ளை தொடர்பாக, டிஎஸ்பி தனராசு மற்றும் மூலனூர் போலீஸ் ஆய்வாளர் சாகுல் அமீர் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் சண்முகம், முத்துக்குமார், விஜயகுமார், தவசியப்பன், தனிப்பிரிவு போலீஸ் சதீஷ்குமார் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பாஸ்கரன் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆக்டிங் டிரைவராக வந்த பரத்திடம் போலிசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கார்டன் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவது தெரிய வந்தது. பாஸ்கருக்கு ஆக்டிங் டிரைவராக வந்த பரத் என்ற இளைஞரும், கொள்ளையடித்து சென்ற குமாரும் அப்பா, மகன் என்பதும் தெரிய வந்தது. அப்பாவும், மகனும் கூட்டு சதி செய்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து வழிப்பறியில் கொள்ளை அடிக்கப்பட்ட 33 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 24 பவுன் தங்க நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகளான தந்தை மற்றும் மகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசாருக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.