கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ஆனந்த்(46). இவர் கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து அன்னுர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் ஆனந்த், டாஸ்மாக் வசூல் பணம் ரூ.10 லட்சத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் செலுத்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் சென்ற விஜய் ஆனந்தை, 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் வழிமறித்து பட்ட கத்தியை கட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர்.
அப்போது, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டதால் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து விஜய் ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது சிவகங்கையை சேர்ந்த லோகநாதன்(22), ஆகாஷ்(19) மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ரவிகண்ணன்(19), கோவையை சேர்ந்த சதிஷ்(19) ஆகியோர் என தெரியவந்தது. இதனை அடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜுலை மாதம் விஜய்ஆனந்திடம் ரூ.15 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற சிவகங்கையை சேர்ந்த முத்துப்பாண்டி(21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் மீது கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் செயின் பறிப்பு, கொள்ளை, இருசக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, கைதான 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.