சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கு பணியிலும், குடும்ப வாழ்க்கையிலும் திறமையாக இருப்பதற்காக ‘ஆனந்தம்’ என்ற திட்டத்தின்கீழ் மனநல பயிற்சி, உறவுகள் மேலாண்மை, சவாலான நேரத்தை சமாளிப்பது, நேர மேலாண்மை, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெண் காவலர்கள் தொடங்கி பெண் ஆய்வாளர்கள் வரை 2,216 பேர் பயிற்சி பெற்றனர்.
இத்திட்டத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா, வேப்பேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது: பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து பணிபுரியும் திருமணமாகாத பல பெண் போலீஸார், தனியாக அறை எடுத்தோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ தங்கும் சூழல் உள்ளது. இதில், அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இந்த சிரமத்தை போக்கும் வகையில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண் காவலர்களுக்காக 400 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டித்தர வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். விளையாட்டுத் துறையில் பெண் போலீஸார் மேலும் சிறந்து விளக்கும் வகையில் தரமான பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.